முகப்பு /செய்தி /திருவள்ளூர் / 175 சவரன் தங்கம்.. பக்கா ப்ளான்.. சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்..!

175 சவரன் தங்கம்.. பக்கா ப்ளான்.. சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்..!

கைது செய்யப்பட்ட நபர்கள்

கைது செய்யப்பட்ட நபர்கள்

தீவிர விசாரணையில் ஹவாலா பணத்தில் வந்த நகையை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கன் எனத் திட்டம் போட்டு கொள்ளை அரங்கேற்றப்பட்டது அம்பலமானது.

  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளுர் மாவட்டம் வெங்கல் அருகே நகை கடைகளுக்கு விற்பனைக்கு ஊழியர்கள் கொண்டு சென்ற 175 சவரன் தங்க நகைகளை சினிமா பாணியில் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். திட்டம் போட்டுக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேர் சிக்கியது எப்படி?

சென்னை நெற்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் ராமேஸ்வர்லால். இவர் தங்க நகைகள் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் காலு ராம், சோகன் லால் ஆகிய இருவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வெங்கல் அடுத்த பூச்சிஅத்திப்பேடு பகுதியில் நகைகடைகளுக்கு விற்பனை செய்ய 175 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கடந்த 20ம் தேதி சென்றுள்ளனர்.

கடைகளில் நகைகளைக் கொடுத்து விட்டு செங்குன்றம் நோக்கி மாகரல் கிராமம் வழியாக இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சினிமா பாணியில் அவரை பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியால் தாக்கி கொள்ளையடித்துச் சென்றது.

அவர்களிடமிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஒன்றரை கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை கும்பல் பறித்துச் சென்றது. தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார் கைகளில் காயம் அடைந்த காலூராமை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கல் காவல்நிலையத்தில் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் நேரில் விசாரணை மேற்கொண்டார்

தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சுமார் 160 சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல் தொடர்புகளை கொண்டு ஆய்வு செய்ததில் நெற்குன்றம் பகுதியில் இருந்து பூவிருந்தவல்லி வழியாக தாமரைப்பாக்கம் வரை நகை கடை ஊழியர்களை கொள்ளைக் கும்பல் நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது.

தீவிர விசாரணையில் ஹவாலா பணத்தில் வந்த நகையை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கன் எனத் திட்டம் போட்டு கொள்ளை அரங்கேற்றப்பட்டது அம்பலமானது. கொள்ளைக்கும்பலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்த பாக்கம் நகைக்கடை உரிமையாளரின் மகன் கமல் கிஷோர் என்பவர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது

பாக்கம் பகுதியில் உள்ள தங்கள் நகைக்கடைக்கு இருவர் நகைகளுடன் வருவதாகவும் அந்த நகைகள் அனைத்தும் ஹவாலா பணத்தில் வாங்கப்பட்டது என்பதால் கொள்ளையடித்தால் கூட போலீசாரிடம் செல்ல மாட்டார்கள் என்றும் தனது கூட்டாளிகளுக்கு கமல் கிஷோர் திட்டம் போட்டுக் கொடுத்துள்ளார். அவர் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி கொள்ளையை அரங்கேற்றிய தமிழ்மணி ,பாலாஜி, சுகுமார், கிளி டாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளைக்கு திட்டம் போட்டுக் கொடுத்த கமல் கிஷோரையும் போலீசார் கைது செய்தனர்.

top videos

    கைதான 5 பேரிடமும் திருவள்ளூர் எஸ்.பி. சிபாஸ் கல்யாண் நேரில் விசாரணை செய்தார். அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ தங்கம், ஒரு கார் 3 இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை நடந்து 4 நாட்களில் கும்பலைப் பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    First published:

    Tags: Crime News