மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 3,900 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 20 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் தங்களை அதற்கு முழுவீச்சோடு தயார்படுத்தி வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்த கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் திருப்பூரில் மொத்தம் 474 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினை எழுத உள்ள நிலையில் அவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு சிறப்பான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்த பின்பு மட்டும் என்று இல்லாமல், கடந்த ஒரு வருடம், இரண்டு வருடம் என தங்களின் மொத்த நேரத்தையும் மருத்துவ நுழைவு தேர்விற்காக செலவிட்டு வந்த மாணவர்கள் எதிர்பார்த்த நீட் தேர்வானது ஜூலை 17ஆம் தேதி நடக்கின்றது.
அரசு பள்ளி, தனியார் பள்ளி, சி.பி.எஸ்.சி என எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மாணவர்களும் காத்திருந்த நீட் தேர்வு மையங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், 6 மையங்களில் தேர்வு நடக்கிறது. திருப்பூர் மண்டலத்துக்குட்பட்ட கே.எம்.சி, பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி, கலை அறிவியல் கல்லுாரி, விஜயமங்கலம் சசூரி இஞ்சினீயரிங் கல்லுாரி, உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லுாரி, கோபி கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 5 மையங்களும், கோவை மண்டல கட்டுப்பாட்டின்கீழ், கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்விற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஹால் டிக்கெட் வினியோகம் நடந்தது. 'நீட்' தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி, கே.எம்.சி பப்ளிக் பள்ளி தாளாளர் மனோகரன் தலைமையில் காங்கயம் டி.எஸ்.பி குமரேசன் மற்றும் குழுவினர் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். சசூரி கல்லுாரி மைய கண்காணிப்பாளர் நந்தகுமார், ஏ.வி.பி கல்வி குழும தாளாளர் கார்த்தியேகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளி, கல்லுாரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளியுடன் தேர்வர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதா, தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
பல கருத்து மோதல்கள், பல்வேறு அரசியல் சூழ்நிலைகள், பல போராட்டங்களை கடந்து மருத்துவ நுழைவுத் தேர்வானது நடக்கின்றது. இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களின் உடல் நலனையும் மன நலனையும் பேணி காப்பது அவசியம். வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் மன வலிமையோடு அதனை எதிர்கொள்வதே முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.