Home /tiruppur /

Tirupur | நூல் விலையின் தொடர் ஏற்ற இறக்கம்: பனியன் உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை

Tirupur | நூல் விலையின் தொடர் ஏற்ற இறக்கம்: பனியன் உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Tirupur | மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை சீராக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மிகப்பெரிய தொழில் நகரமாகும். இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் விசைத்தறி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை சார்ந்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வருவாயில் திருப்பூரின் பங்கு அதிகமாகவே உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக நூல் விலை மற்றும் பஞ்சு விலை உயர்வு காரணமாக தொழிலாளர்கள் மற்றும் பனியன் நிறுவன உரிமையாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் பொருளாதார சரிவு இருந்தது.

பின்னலாடை தயாரிப்புக்கு நூல்தான் மிக முக்கிய மூலப் பொருளாக இருந்து வருகிறது. தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டமும் திருப்பூரில் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்திருந்தது. இந்நிலையில் மே மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்ட போது கிலோவுக்கு மேலும் ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன. இதனால் திருப்பூர் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஜூன் மாதத்திற்கான நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், மே மாதம் விற்கப்பட்ட விலையே ஜூன் மாதமும் தொடர்ந்தது. இந்நிலையில் நடப்பு மாதமான ஜூலை மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன. இதன்படி கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாகவும் ரகத்திற்கு ஏற்றபடி ஒரு கிலோ நூல் 350 ரூபாய் முதல் 420 ரூபாய் வரை விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.360-க்கும்,
24-ம் நம்பர் ரூ.375-க்கும், 30-ம் நம்பர் ரூ.385-க்கும், 34-ம் நம்பர் ரூ.405-க்கும், 40-ம் நம்பர் ரூ.425-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.365-க்கும், 24-ம் நம்பர் 375-க்கும், 30-ம் நம்பர் ரூ.385-க்கும், 34-ம் நம்பர் 395-க்கும், 40-ம் நம்பர் ரூ.415-க்கும்  விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரூ. 210 க்கு விற்கப்பட்ட நூல் தற்பொழுது ரூ. 160 க்கு விற்கப்படுகின்றது. இதனால் நூல் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்புடன் துணி வியாபாரிகள் துணிகள் கொள்முதல் செய்வதை குறைத்து விட்டனர். இதனால் உற்பத்தி செய்த துணிகள் அனைத்தும் தேக்கம் அடைந்து விட்டன.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பஞ்சு விலை உயர்வை காரணம் காட்டி உயர்த்தப்பட்டு வந்த நூல் விலையானது தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்தது மற்றும் பஞ்சு விலை குறைவால் தற்போது இந்த மாதம் நூல் விலையை நூற்பாலைகள் குறைத்துள்ளன. ஆனால் நூல் விலையை நூற்பாலைகள் இன்னும் கூட குறைக்கலாம் என திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்‌.
எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை சீராக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tirupur

அடுத்த செய்தி