Home /tiruppur /

திருப்பூரில் குண்டும் குழியுமாக  சாலைகள்...மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் வாகன ஓட்டிகள்  அவதி.. 

திருப்பூரில் குண்டும் குழியுமாக  சாலைகள்...மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் வாகன ஓட்டிகள்  அவதி.. 

திருப்பூர் சாலை

திருப்பூர் சாலை

திருப்பூரில் குண்டும் குழியுமாக உள்ள நீரில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர.

திருப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு மாநகர் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளன. கடந்த சில வாரங்களாக திருப்பூரில் பெய்து வரும் கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியவாறு உள்ளன. மேலும், நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதாலும் திருப்பூர் மாநகரில் பெய்து வரும் மழையினாலும் நொய்யல் ஆறானது நிரம்பியுள்ளது.

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள பாலம் நீரில் மூழ்கியது. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட அதிகப்படியான நீரோட்டத்தின் காரணமாக கழிவுகளும் குப்பைகளும் சாலைகளில் ஓடும் மழை நீருடன் கலந்து அப்பகுதி முழுவதும் வாகனங்கள் செல்வதற்கும் மக்கள் நடப்பதற்கும் குடியிருப்பதற்கும் ஏதுவாக இல்லாத சூழ்நிலை உள்ளது.

ஸ்ரீ சக்தி தியேட்டர் ரோடு, ஈஸ்வரன் கோவில் ரோடு, மின் மயானம் ரோடு ஆகிய சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. மேலும் இச்சாலைகள் நகரின் முக்கிய சாலைகளாக கருதப்படுவதாலும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதாலும் மழைக்காலங்களில் நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சேதமடைந்த நிலையில் சாலைகள்


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ‘இன்று நேற்று என்றல்லாமல் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்கள் ஏற்படும் பொழுதும் இந்த சிரமத்தினை நாங்கள் சந்தித்து வருகின்றோம். நொய்யல் ஆற்றில் குப்பைகளை கொட்டுவதினாலும், சாயப்பட்டறை கழிவுகள் கலந்து விடுவதாலும், தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியவற்றை நொய்யல் ஆற்றிலே போடுவதினாலும் நொய்யலானது மாசுபட்டுள்ளது.

குப்பைகள் சூழ்ந்த நிலையில் சாலைகள்


மேலும் நொய்யல் ஆற்றில் உள்ள கருவேல மரங்கள் நீரின் பாதையை அடைத்துக் கொள்வதினாலும் ஆற்று நீரானது வழிந்தோடாமல் கழிவுநீராக இங்கேயே தேங்கி விடுகின்றது.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் சுவாச கோளாறு, கொசு அதிகமாவதால் டெங்கு மலேரியா, வைரஸ் காய்ச்சல் என்று அதிகப்படியான நோய்கள் வருகின்றன. இது மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கு யானைக்கால் நோய், காலரா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

மழை நீர் தேங்கி சாலைகள்


கொசுக்கள் மற்றும் ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் சாப்பிடுவதற்கு கூட ஏதுவான சூழல் இல்லாமல் இருக்கின்றது. மேலும் சாலைகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளின் காரணமாக வீட்டின் முன்பும் சாலைகள் எங்கும் அருவருக்கத்தக்க சூழல் உள்ளது.

இந்தச் சாலைகளில் உள்ள தள்ளுவண்டிகள், பழ கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் என அனைத்து உணவுப் பொருட்கள் விற்க்கும் கடைகளிலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.

இதனால் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் குப்பைகளை தூர்வார வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி