ஹோம் /Tiruppur /

Tirupur | தினமும் டன் கணக்கில் குப்பைகளைக் கொட்டி எரிக்கின்றனர்- பொதுமக்கள் வேதனை

Tirupur | தினமும் டன் கணக்கில் குப்பைகளைக் கொட்டி எரிக்கின்றனர்- பொதுமக்கள் வேதனை

எரிக்கப்படும் குப்பை

எரிக்கப்படும் குப்பை

Tirupur | திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வது வார்டு பெரிச்சிபாளையம் பகுதியில் சுற்றுவட்டார பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக குடியிருப்புகளுக்கு மத்தியில் கொட்டப்படுகின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பூர் மாநகராட்சியில் பெரிச்சிபாளையம் பகுதி சுமார் ஆயிரம் குடியிருப்புகளை கொண்ட மிகப்பெரிய பகுதியாகும். பனியன் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்து உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் இங்கு பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அருகிலும் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக மக்கள் வசிப்பிடத்திற்கு அருகில் மாநகராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை இங்கு வந்து கொட்டுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எரிக்கப்படும் குப்பை

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ’சாயப்பட்டறைகள், பனியன் நிறுவனங்களில் மீதமாகும் கழிவுகள், எம்பிராய்டரி போட பயன்படுத்தப்படும் போம்கள் ,திருமண மண்டபங்களில் மீதமாகும் குப்பைகள், கழிவுகள், தரம் பிரிக்கப்படாத பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் குப்பைகள் ,திருப்பூர் அரசு மருத்துவமனையின் குப்பைகள், வெள்ளியங்காடு, செரங்காடு போன்ற சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை இப்பகுதியில் வந்து கொட்டுகின்றனர்.

கொட்டப்படும் குப்பை

தினமும் டன் கணக்கான குப்பைகளை இங்கு வந்து கொட்டுவதாகவும், குப்பைகள் அதிகமானால் அவற்றை இரவு நேரங்களில் தீ வைத்து விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் சுவாச கோளாறு போன்ற பல நோய்கள் வருவதாகவும், அதிகப்படியான குப்பைகளினால் ஈக்களின் தொல்லைகள் அதிகம் ஆவதால் தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொட்டப்படும் குப்பை

சுற்றி பனியன் நிறுவனங்களும், பள்ளிக்கல்வி நிறுவனங்களும் அதிகம் உள்ளதால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான சாலைகளிலும் குப்பைகள் இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கும், நடப்பதற்கும் கூட சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குப்பை கொட்டும் இடத்திற்கு அருகிலேயே பொது கழிப்பிடம் உள்ளதால் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் குடியிருப்பதற்கு ஏதுவான சூழல் அங்கு இல்லாததாகவும் கூறுகின்றனர்.

மேலும், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்திலும் குப்பைகளை கொட்டுவதாகவும் எத்தனையோ முறை புகார் அளித்தும் கேட்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதைப் பற்றி பலமுறை அப்பகுதி கவுன்சிலரிடம் சொல்லியும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் \" எல்லா பிரச்சனைகளையும் நாங்களே நேரில் வந்து பார்க்க முடியாது\" என்றும் ஏளனமாக பதில் அளிப்பதாகவும் கூறுகின்றனர்.

மக்களின் வாழ்விற்கு அடிப்படை தேவைகளான நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் ஊருக்கு வெளியே யாருக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் இம்மாதிரியான குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதே நிலைமை இங்கு நீடித்தால் அவர்கள் வீதியில் இறங்கி போராட தயாராக உள்ளதாகவும் இல்லையெனில் அந்தப் பகுதியை சுற்றி கம்பி வேலி அமைக்க போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Tirupur