நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பிதாமகன் புதுமைப்பித்தனின் 118 வது பிறந்த நாள் விழா மற்றும் உலக புத்தகத்தின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்டக்குழுவும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து புதுமைப்பித்தனின் 118 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடின. அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வண்ணமுத்து அனைவரையும் வரவேற்றார்.
158 புத்தகங்கள் எழுதிய வரலாற்று ஆய்வாளர் செ.திவான் ,சத்தியவள்ளி ஆகியோர் எழுத்தாளர் புதுமைப்பித்தன் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் பேசும்போது " நாற்பத்தியிரண்டு வருடங்கள் மட்டுமே வாழ்ந்த புதுமைப்பித்தன், நவீன உரைநடை இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்லலாம். பாரதிக்கு கூட, கவிதை மரபில் முன்னோடியாய் பலர் உண்டு. ஆனால், 105 வருடங்கள் கொண்ட தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு, முன்னோடிகள் எவரும் இல்லை. உலக தரத்திலான பல சிறுகதைகளைப் படைத்தவர் புதுமைப்பித்தன்.
அவரது " கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" , " சாப விமோசனம் ",
" செல்லம்மாள்", " நாசகாரக்கும்பல்", " துன்பக்கேணி" போன்ற சிறுகதைகள் சாகாவரம் பெற்றவை. இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு,ஜெர்மன், ருசியா, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சர்வதேச சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார் புதுமைப்பித்தன். ஹிட்லரைப்பற்றி" கப்சிப் தர்பார் " என்ற நூலை எழுதியிருக்கிறார். தமிழ் திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதியிருக்கிறார். ராஜமுக்தி படத்திற்கு எழுதிக்கொண்டிருக்கும்போது, காசநோய் பாதித்து, சில மாதங்களில் இறந்தார்.
அக்காலத்தில் " மணிக்கொடி" இதழில் அதிகமாக சிறுகதைகள் எழுதியவரும் இவரே. இவரது படைப்புக்களை அடுத்த தலைமுறையினரான மாணவர்கள் வாசிக்க வேண்டும். திருநெல்வேலியை பூர்வீகமாய்க்கொண்ட எழுத்தாளர் புதுமைப்பித்தனை கவுரவப்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சி, அவரது மார்பளவு சிலையினை பொருத்தமான இடத்தில் வைத்து அவருக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்று எழுத்தாளர் சங்கம் சார்பில்வேண்டுகோள் விடுக்கிறோம்"
என்றார்.
நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாணவி காயத்ரி புதுமைப்பித்தன் பற்றி பேசினார். புதுமைப்பித்தனின் சிலையை வடித்த சிற்பி சந்துருமாவட்ட செயலாளர் வண்ணமுத்து பாராட்டி பயனாடை அணிவித்தார். எழுத்தாளர்கள் கிருஷி, வைகுண்டமணி, பாலு, சசிகுமார், ஆசிரியர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் சிந்துபூந்துறை சண்முகம் நன்றி கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nellai, Tirunelveli