இந்தியாவிலேயே வெள்ளையர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதிய ஒரே இடம் தென் மாவட்டம் தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் வ.உ.சி.சுப்பிரமணிய சிவா போன்றோரின் எழுச்சியே காரணம் என கூறப்படுகிறது.
திருநெல்வேலி எழுச்சி நாள் :
திருநெல்வேலிக்காரர்கள் எத்தனை பேருக்கு இந்த எழுச்சி நாள் பற்றி தெரியும் என்று சொல்ல முடியாது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மார்ச் 13ம் தேதி எழுச்சி நாள் மகத்தான பங்கு உண்டு. மார்ச் 12ம் தேதி சுயராஜ்ய தினம் கொண்டாடிய ஒரே குற்றத்திற்காக வ.உ.சி.சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அதற்கு மறுநாள் மார்ச் 13ம் தேதி திருநெல்வேலியில் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த நாள்தான் திருநெல்வேலி எழுச்சி நாள் என்று கொண்டாடப்படுகிறது. இது திருநெல்வேலி கலகம் என்று ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்படுகிறது.
3 முக்கியமானவர்கள் :
இதுகுறித்து எழுத்தாளர் நாறும் பூநாதன் கூறுகையில், “20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே காந்தி அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தேசிய அளவில் மிக முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றால் அது பால கங்காதர திலகர், லாலா ராஜபதி ராய், பிபின் சந்திர பாலர் இந்த 3 முக்கியமானவர்கள். இவர்கள்தான் மிக முக்கியமான தலைவர்கள். இதில் பிபின் சந்திர பாலர் என்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவரை பிரிட்டிஷ்காரர்கள் கைது செய்கிறார்கள் பின்பு அவரை விடுதலை செய்வதற்கு நாள் குறிக்கிறார்கள். 1908 மார்ச் 9ம் தேதி அவரை விடுதலை செய்வதாக அறிவிக்கிறார்கள். 6 மாதம் சிறை தண்டனை முடிந்து வெளியே வருகிறார் பிபின் சந்திர பாலர். அந்த நாளை திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மிகப்பெரிய சுயராஜ்ய நாளாக கொண்டாடப்பட வேண்டும் என வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் திட்டமிடுகிறார்கள்.
சுயராஜ்ய தினம் :
ஏனென்றால் அன்றைக்கு சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வ.உ.சி.தேர்வு செய்யப்பட்டார். தினமும் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் அந்நிய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என இருவரும் பேசி வந்துள்ளனர். தொடர்ச்சியாக பேசியதின் விளைவாக மார்ச் 9ம் தேதி சுயராஜ்ய தினமாக கொண்டாட முடிவு செய்கிறார்கள்.
தடை விதித்த வெள்ளையர்கள் :
இதற்கு வெள்ளைக்காரர்கள் தடை செய்கின்றனர். தடையை மீறி நெல்லையில் தைப்பூச மண்டபத்திலே வ.உ.சி.சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் பேசுகிறார்கள். இதில் 12,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அதில் வெள்ளைக்காரர்களை விரட்ட வேண்டும் வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்டவை தொடர்பாக பேசப்பட்டன. சுதேசி பொருட்களை ஆதரிக்க வேண்டும் எனவும் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த மூவரும் 1908ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி கைது செய்யப்படுகிறார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டு மார்ச் 13ம் தேதி திருநெல்வேலியில் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்படுகிறது. இதில், மதிதா இந்து கல்லூரி மாணவர்களும் மக்களுடன் சேர்ந்து போராடினார்கள். இந்த கல்லூரி பேராசிரியர் லோகநாத ஐயர் தான் இந்த போராட்டத்தை தூண்டிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.
சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் :
இதில் தாலுகா அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. காவல் நிலையமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் வெள்ளைக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிறுவன் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடியிலும் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. தூத்துக்குடியில் வெள்ளையர்களை வந்தே மாதரம் சொல்ல சொல்லி மக்கள் பயமுறுத்தினர். இதனால் வெள்ளையர்கள் கடலுக்குள் சென்று கப்பலில் மறைந்திருந்தனர்.
இந்தியாவிலேயே வெள்ளையர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதிய ஒரே இடம் தூத்துக்குடி தான் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வ.உ.சி. சுப்பிரமணிய சிவா போன்றோரின் எழுச்சியாகும். வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த பிரச்சனை தான் காரணம். சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், இதற்கு அடிப்படையான காரணம் வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்தது தான் என்று சொல்லப்பட்டது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை சென்றது :
இந்த சம்பவம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதனை வெள்ளைக்காரர்கள் ‘திருநெல்வேலி கலகம்’ என்று வர்ணிக்கின்றனர். சுதந்திரப் போராட்டத்திற்கு போராடியவர்கள் எப்படி கழகம் செய்தார்கள் என்று சொல்ல முடியும் எனவே திருநெல்வேலி எழுச்சி நாள் என திருநெல்வேலி பொதுமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது” என்று நாறும் பூநாதன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli