முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மக்களே உஷார்.. இந்த ரூட்டில் எல்லாம் ரயில் நேரம் மாற்றியமைப்பு!

நெல்லை மக்களே உஷார்.. இந்த ரூட்டில் எல்லாம் ரயில் நேரம் மாற்றியமைப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Tirunelveli railway station | திருநெல்வேலி ரயில் நிலையம் வழியாக வந்து செல்லும் சில ரயில்களின் நேரத்தை குறைத்து, கால அட்டவணை மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருச்செந்தூர் திருநெல்வேலி இடையேயான 61 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளங்கள், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் பலப்படுத்தப்பட்டது.

கடந்த 15ஆம் தேதி இந்த பாதையில் அதிவேக ரயில் இயக்கி அதற்கான சோதனை நடத்தப்பட்டது. மின்மயமாக்கல் செய்யப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரயில்களை இயக்குவதற்கும் தயார் செய்யப்பட்டது. அதற்கான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த வழித்தடத்தில் ரயில்கள் பழைய முறைப்படி டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது அதோடு வேகமும் அதிகரிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரம் வருகிற 1ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் மாற்றப்பட்டு உள்ளது. இதில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரம் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து வழக்கம் போல் மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. அங்கிருந்து, நெல்லை சந்திப்புக்கு வழக்கம் போல் அதிகாலை 4.55 மணிக்கு வந்து விடும். நெல்லையில் மின்சார என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் மாற்ற வேண்டி உள்ளதால் காலை 6 மணிக்குதான் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு காலை 8 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

ஆனால் வருகிற 1ஆம் தேதி முதல் நெல்லையில் டீசல் என்ஜின் மாற்ற தேவையில்லை. ஏனென்றால் இந்த ரெயில் இனிமேல் முழுமையாக சென்னை முதல் திருச்செந்தூர் வரை மின்சார என்ஜின் மூலம் இழுத்து செல்லப்படுகிறது. அதனால் நெல்லைக்கு காலை 4.55 மணிக்கு வந்தவுடன் மீண்டும் 5 மணிக்கு திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு செல்கிறது. திருச்செந்தூருக்கு 6.50 மணிக்கு சென்றடைவதாக கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் 1 மணி 10 நிமிடங்கள் பயண நேரம் குறைகிறது. அதே நேரத்தில் இந்த ரயில் காலை 5.59 மணிக்கு காயல்பட்டினம் சென்று விடுவதாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், திருச்செந்தூருக்கு குறிப்பிட்ட 6.50 மணிக்கு முன்னதாகவே இந்த ரயில் சென்றடையும் என்று தெரிகிறது.

பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு பிற்பகல் 1.45 மணிக்கு வந்து திருச்செந்தூரை 3.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு பதிலாக 12.20 மணிக்கு புறப்படுகிறது.

top videos

    அதே நேரத்தில் வழக்கம் போல் நெல்லைக்கு 1.25 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் வழக்கமான கால அட்டவணையில் பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோல் திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரங்களும் 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Nellai, Southern railway