திருப்புடைமருதூரிலுள்ள கோமதி அம்பாள் உச்சி முதல் பாதம்வரை உலகில் எங்கும் காணா வண்ணமாக ருத்ராட்சத் திருமேனியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் 1200 வருடங்கள் பழமையான திருக்கோவிலில் கோமதி அம்பாளுடன் ஸ்ரீநாறும்பூநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். திருநெல்வேலி – பாபநாசம் சாலையில் வீரவநல்லூரிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ தொலைவில் திருப்புடைமருதூர் அமைந்திருக்கிறது.
மன்னர் வீரமார்த்தாண்டவர்மன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, அவர் எய்த அம்பு பட்டு மான் ஒன்று மருத மரத்துக்குள் சென்று மறைந்தது.
மன்னர் எட்டிப் பார்க்க மான் லிங்கமாக மாறி இத்திருத்தலத்தின் இறைவன் நாறும்பூ நாதசுவாமியாக மன்னருக்குக் காட்சியளித்தது. கருவூர் சித்தர், சிவனைத் தரிசிக்க இங்கே வந்திருந்தபோது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியாமல் இருந்த இடத்திலிருந்தே மனமுருகி வழிபட்டார். பின்னர் சிவனை மனத்தில் நினைத்துப் பாடல் ஒன்றைப் பாடினார்.
அவரது பாடலை ரசிக்க விரும்பிய சிவன் தனது இடது காதில் கைவைத்து ஒருபுறம் சாய்வாகத் திரும்பினார். பின்னர் சித்தரிடம் “என்னை மனத்தில் நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார். கருவூராரும் அப்படியே செய்து ஆற்றைக் கடந்து சிவனைத் தரிசித்துவிட்டு அவரிடம் பக்தர்கள் நலன் கருதி ஒரு கோரிக்கையையும் வைத்தார்.
அதாவது எக்காலத்திலும் இங்கே தரிசிக்க வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளைச் செவிசாய்த்துக் கேட்டு அவற்றை நிறைவேற்றித் தரும்படி வேண்டினார். சுவாமியும் அவர் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே நடக்கும் என்று அருள்புரிந்தார்.
இத்திருத்தலத்து கோமதி அம்பாள் உச்சி முதல் பாதம்வரை உலகில் எங்கும் காணா வண்ணமாக ருத்ராட்சத் திருமேனியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. திருப்புடைமருதூர் கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டுள்ளது. முகப்பு கோபுரத்தின் உள்ளே 500 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகையால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
காசியில் கங்கை தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதைப் போன்று இங்கே தாமிரபரணியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்கிறது. எனவே, இவ்வூர் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli