"வட்டியில்லா இஸ்லாமிய நிதிநிறுவனங்கள் இந்தியாவில் அதிகமாகத் தொடங்க வேண்டும்..." என நெல்லையில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கலையரங்கில் ஹாஜி எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப் ஹுசேன் வரவேற்றுப் பேசினார். அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தொடங்கிவைத்துக் கல்லூரித்தாளாளர் ஹாஜி த.இ.செ.பத்ஹுர் ரப்பானி தலைமையுரையாற்றும் போது, இறைவனுக்கு அஞ்சிப் பொருள் ஈட்டுவதும், முறையாகச் செலவழிப்பதையும் இஸ்லாமியப் பொருளாதாரம் வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு.அப்துல்காதர் வாழ்த்துரை வழங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.அபுபக்கர் முன்னிலை வகித்தார்.
'இஸ்லாமியப் பொருளாதாரம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, " இஸ்லாமியப் பொருளாதாரம் மிகப் பெரிய கடல். பொருளாதாரம் என்றாலே மாணவர்களுக்குப் போர் அடிக்கும் பாடம்தான். பொருளாதரம் மிகப் பழைய பாடம். ஆனால் இஸ்லாமியப் பொருளாதாரம் மிக இளமையானது. இஸ்லாமிய வங்கியியல் இன்று உலகளாவிய அளவில் பேசப்படுகிறது. இலாபத்தையும் இழப்பையும் பகிரக்கூடிய இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. உலக நாடுகளின் வங்கிகளில் வட்டியில்லாமல் செயல்படும் பகுதிகள் உள்ளன.
நவீன கணினியியலின் தந்தை சார்லஸ் பாபேஜ் என்று சொல்கிறோம். அல்காரிதத்தைச் சொல்லித்தந்த அபுல் மூசா என்பவரை நாம் சொல்வதில்லை. நவீன பொருளாதாரத்தின் தந்தை ஆடம்ஸ் மீத் என்கிறோம். ஆனால் இப்னு கல்தூன் என்பவர் இஸ்லாமியப் பொருளாதாரத்தை முன்வைத்தவர். இஸ்லாமிய நாகரிகத்தின் பொற்காலம் கிபி.8-11 ஆம் நூற்றாண்டு. வரி விதிப்பு, விவசாய உற்பத்தி குறித்த நூல்களும் அக்காலகட்டத்தில் உருவாயின. உழைப்புப் பகிர்வு குறித்த சிந்தனைகளை முஸ்லீம் அறிஞர்கள் தந்துள்ளனர். உழைப்பு மதிப்புக்கோட்பாடு, நவீன விலைக்கோட்பாடு, லாபக் கோட்பாடு இவை எல்லாம் இஸ்லாமியப் பொருளாதரம் முன்வைத்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இஸ்லாமியப் பொருளாதாரம் சமூக அறிவியல், மனிதர்களின் பொருளாதாரப் பிரச்சனைகளை இஸ்லாமிய நெறிமுறைப்படி பார்ப்பதே இஸ்லாமியப் பொருளாதாரமாக அமைகிறது. முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடு, கம்யூனிசக் கோட்பாடு ஆகியவை உலகில் நிலவி வருகிறது. இஸ்லாமியப் பொருளாதாரம் ஒழுக்க மாண்புகளை உள்ளடக்கியது. மனிதனின் ஒவ்வொரு செயல்களும் இறைநெறிப்படி அமையவேண்டும். உள்ளத்தூய்மையோடு திகழ இஸ்லாமியப் பொருளாதாரம் வலியுறுத்துகிறது. இறைவனுக்குப் பொறுப்புடைமை உள்ளவர்களாக அனைவரும் திகழ்கிறோம். இஸ்லாமியப் பொருளாதாரத்தின் குறிக்கோள், தனிமனிதமும் சமூகமும் தங்கள் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதுதான் இருக்கும் உலக வளங்களை அதிகபட்சப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது. இருக்கும் செல்வங்களை அனைவருக்கும் சரியாகப் பகிர்வது கட்டாயம். குடும்பம், அண்டைவீட்டார், சமூகத்தை இது மேம்படுத்துகிறது.
பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆறுகளையும் மலைகளையும் பாழாக்குவதை எப்படி வளர்ச்சி என்று சொல்லமுடியும்? வட்டியில்லா இஸ்லாமிய நிதிநிறுவனங்கள் இந்தியாவில் அதிகமாகத் தொடங்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். துணை முதல்வர் டாக்டர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி ஆட்சிக்குழு சிறப்பாகச் செய்திருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli