திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைசதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது கல்லூரியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. அரபிக் துறை உதவிப்பேராசிரியர் முகம்மது ரபீக் இறை வாழ்த்து ஓதினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் பேசுகையில், “அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் கல்வியால் சிறந்த திருநெல்வேலியில் ஒற்றுமையைப் பறைசாற்றும் விழா நடைபெறுகிறது. அனைவரும் இணைந்து ஒற்றுமைப் பெருவிழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டார்.
தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலய ஆசிரியர் சிவாகம கிரியா விசாரத் ஆர். ஹரி சங்கர் சிவம் பேசும்போது, “வழிபாடு முக்கியமானதாக அமைகிறது. வழிபாடு விரதம் நோன்புகள் ஆன்மாவைச் சுத்தி செய்வதாக அமைகிறது. இந்து சமயத்தில் கந்த சஷ்டி விரதம், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்பர், விரதம் இருக்கும் நேரத்தில் மனம் தூய்மையடைகிறது. மனம் வாக்கு காயம் சுத்தியடைந்தால் நாம் முக்தியடைய முடியும்.
நீக்கமற நிறைந்துள்ள இறைவனை வழிபட்டால் வாழ்வு சிறப்படையும். அன்புதான் எல்லாம். அன்புதான் சிவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறார். இறைவழிபாட்டில் ஒரு பச்சிலை போதும், அதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு உணவு தரவேண்டும். அதுவும் முடியாவிட்டால் இறைவனை நினைத்தால் போதும். இறைவழிபாடும் விரதமும் நம்மை மேம்படுத்துகிறது” என்றார்.
இதையும் படிங்க : சுவையான அத்தோ இப்படித்தான் செய்யுறாங்க.. புதுச்சேரியை கலக்கும் பர்மா உணவுகள்!
மேலும் தூய சவேரியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரியதாஸ் பேசும்போது, “உயிரினங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தவன் மனிதன், இறைவனின் இனிய படைப்பு திசைமாறிச் செல்வதைத் திருத்த நோன்புகள் அவசியமாகிறது. செல்பேசியின் தவறான பாதையால் உலகம் சீரழிகிறது. பத்து நிமிடமாவது ஜெபம் செய்ய வேண்டும் அதுவே மன அமைதிக்கு அடிப்படை. நம்மையே நாம் மேம்படுத்திக்கொள்ள நோன்பும் வழிபாடும் அவசியம். அன்பும் உறவும் விலைபேசப்படுகிறது. எங்கு உண்மையான அன்பு இருக்கிறது என்று எல்லோரும் தேடுகிறார்கள். எத்தனை பேரின் உள்ளங்களை வென்றிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்வு இருக்கிறது" என்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி ஜமா அதுல் உலமா சபைத் தலைவர் மெளலானா பி.ஏ.கே.அப்துல் ரஹீம் பாசில் பாகவி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரிப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஹாபிழ், அப்துர் ரஹ்மான் சிராஜி நிகழ்ச்சி நிறைவாக இப்தார் சிறப்பு துஆ ஓதினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா நன்றி கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அரபிக் துறை உதவிப் பேராசிரியர் ஜனாப். எம்.என்.எம். முகம்மது இல்யாஸ் உஸ்மானி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவர் பேரவைத் தலைவர் சபீக் அஸ்வான், பேரவைச் செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்தார் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கல்லூரி மாணவர் பேரவையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli