முகப்பு /செய்தி /திருநெல்வேலி / 80 வயது மூதாட்டியை கட்டிலுடன் தூக்கி சென்று சுடுகாட்டில் விட்டுச் சென்ற உறவினர்கள் - நெல்லையில் கொடுமை

80 வயது மூதாட்டியை கட்டிலுடன் தூக்கி சென்று சுடுகாட்டில் விட்டுச் சென்ற உறவினர்கள் - நெல்லையில் கொடுமை

பாதிக்கப்பட்ட மூதாட்டி

பாதிக்கப்பட்ட மூதாட்டி

Nellai old women | இது குறித்து நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இசக்கியமாளை காப்பகத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டம், களக்காட்டில் 80 வயது மூதாட்டியை அவரது கட்டிலோடு உறவினர்கள் தூக்கிவந்து, சுடுகாட்டில் தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், களக்காடு  சிதம்பரபுரத்தில் மூனாற்று பிரிவு என்ற இடத்தில் இடுகாடுகள் உள்ளது. இந்த சுடுகாட்டில் நேற்று மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் விசாரித்த போது உறவினர்களே அவரை சுடுகாட்டில் வீசி சென்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் (80) என்பது தெரிய வந்தது. அவரது கணவர் ஆறுமுகம் இறந்து விட்டதால், அவரை அவரது மகன் கந்தசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் உயிரிழந்ததால், கந்தசாமியின் இரு மனைவிகளும் மூதாட்டி இசக்கியம்மாளை பராமரித்து வந்துள்ளனர்.

இசக்கியம்மாளும் அக்கம், பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நாளடையில் வயது முதிர்வின் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உடல் நல குறைவும், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் பராமரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி சுடுகாட்டில் வீசி விட்டு சென்று விட்டனர். அவர் பயன்படுத்திய சேலைகளையும் மூடையாக கட்டி அருகில் போட்டு விட்டு சென்று விட்டனர். அவர் உணவுக்கு வழியின்றி தவித்தார்.

இதையும் படிங்க | ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்.. பதைபதைக்கும் காட்சிகள்!

அந்த வழியாக சென்றவர்கள் அவருக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வாங்கி கொடுத்தனர். உயிருடன் மூதாட்டியை பராமரிக்க மறுத்து, உறவினர்களே சுடுகாட்டில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும் லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கவும் செய்துள்ளனர். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அதன் பின் போலீசார் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் எச்சரித்து, அவரை ஒப்படைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் மூதாட்டியை ஏற்கவும், பராமரிக்கவும் மறுத்து விட்டனர். இதையடுத்து மூதாட்டி நடுத் தெருவில் ஆதரவின்றி தவித்து வருகிறார். மூதாட்டி இசக்கியம்மாள் வைத்திருந்த மோதிரத்தையும், அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் சிலர் ஏமாற்றி பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதில் இருந்துதான் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மனநிலை பாதிப்பால் மூதாட்டி எந்த நேரமும் பேசிக் கொண்டும், ஏசிக் கொண்டும் இருக்கிறார்.  இது குறித்து நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இசக்கியமாளை காப்பகத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: சிவமணி, நெல்லை.

First published:

Tags: Local News, Nellai