முகப்பு /திருநெல்வேலி /

'வற்றாத ஜீவ நதி' தாமிரபரணி ஆறு இப்போ எப்படி இருக்கு தெரியுமா? நெல்லை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

'வற்றாத ஜீவ நதி' தாமிரபரணி ஆறு இப்போ எப்படி இருக்கு தெரியுமா? நெல்லை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

X
தாமிரபரணி

தாமிரபரணி ஆறு

Tirunelveli district | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் இன்றைய நிலை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

நதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக 1997ஆம் ஆண்டு முதல், மார்ச் 14ஆம் தேதி சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நதிகளை சுத்தமாக பராமரிப்பது அழியும் நதிகளை மீட்டெடுப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினத்தின் நோக்கம் ஆகும்.

வற்றாத ஜீவ நதி என்று போற்றப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் இன்றைய நிலை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். வற்றாத ஜீவநதி என்ற வார்த்தையை இனி பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த . நிவேக் மற்றும் சபரி வாசன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் இன்றைய நிலை குறித்து தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிவேக் கூறுகையில், முன்பு போல தாமிரபரணி ஆற்றை புனித இடம் நீராடும் இடம், தண்ணீர் எடுக்கும் இடம் போன்றவை அல்லாமல் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டும் இடமாக பொதுமக்களாகிய நாமே மாற்றி விட்டோம்.

இதை இப்போதே சரி செய்யவில்லை என்றால் இனி வரக்கூடிய காலங்களில் வற்றாத ஜீவநதி என்ற வார்த்தையை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுவோம். சங்க காலத்தில் இலங்கை வரை தாமிரபரணி ஆறு பாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது 126 கிலோமீட்டர் தூரம் வரையே தாமிரபரணி ஆறு பயணம் உள்ளது . தாமிரபரணி ஆறு செல்லும் இந்த 126 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கின்றது தாமிரபரணி ஆறு. இந்த ஆறு, வெறும் தண்ணீர் மட்டுமல்ல நெல்லை மக்களின் உடம்பில் ஓடும் ரத்தமும் ஆகும். தாமிரபரணி ஆற்றிற்கும் மக்களுக்கும் உண்டான உறவு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாகும்.

இதனை பாதுகாக்கும் வகையில் கடந்த ஏழு வருடங்களாக பணி செய்து வருகிறோம் குறிப்பாக சீம கருவேலை மரங்களை அகற்றுதல், பனை மற்றும் புதிய மரங்கள் நடுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம். ஆற்றை தூய்மைப்படுத்தும் வகையில் தண்ணீரில் இருக்கும் துணிகள், மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அகற்றி வருகிறோம். இதனை பாராட்டி முன்னாள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இங்கேயே வந்து எங்களை பாராட்டினார் என்று கூறினார்.

மேலும், பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க வரும் பொழுது குப்பைகளை போடக்கூடாது. குறிப்பாக மது பிரியர்கள் மது பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்லக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய நிவேக், மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க உள்ளூர் தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

First published:

Tags: Local News, Nellai, Thamirabarani, Thamiraparani, Tirunelveli