நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வழக்கறிஞர் மகராஜன், “அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விசாரணை என்ற அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து 14 பேர் வரை பல்லை பிடுங்கி உள்ளார். அந்த எண்ணிக்கை 40 கூட இருக்கலாம் பல்லை பிடுங்கிய நபர்கள் அனைவருமே அப்பாவி பொதுமக்கள். கணவன் - மனைவி சண்டை, சிசிடிவி கேமரா உடைத்தவர்கள் என சிறிய சிறிய புகாரில் உள்ளவர்கள் மட்டுமே.
தொடர்ந்து பல்வேறு புகார்களை அரசுக்கு தெரிவித்த நிலையில் சிறிய ஆறுதலாக ஏஎஸ்பியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அது வரவேற்கத்தக்கது ஆனால் இது போதாது. பொது மக்களை கொடூரமாக தாக்கிய ஏஎஸ்பிஐயை உடனடியாக கைது செய்ய வேண்டும். நீதி விசாரணை அதிகாரிகளிடம் சாட்சி சொல்ல அனைவருமே பயப்படுகிறார்கள் காவல்துறையினர் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணையை நடத்த வேண்டும்” என கூறினார்.
Read More : விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்- மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களின் இல்லங்களுக்கு காவல்துறை செல்லக்கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த நபர்களின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் இருக்கிறோம். சார் ஆட்சியர் தலைமையிலான விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை. ஒரே நிலையிலான(நிர்வாக ரீதியான நிலை) ஒரே பகுதியில் பணி செய்து வரும் அதிகாரிகளை வைத்து இந்த சம்பவத்தில் விசாரணை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்ற வேண்டும். சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடனடியாக கைப்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களை மறைமுகமாக மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எங்களிடம் தெரிவித்தால் அனைவரையும் பாதுகாப்பான முறையில் நாங்கள் விசாரணை குழுவிடம் ஆஜராக செய்கிறோம். பாதிக்கப்பட்ட தரப்பு மக்களிடம் ஆலோசனை நடத்தி அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்” என தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Thirunelveli