முகப்பு /செய்தி /திருநெல்வேலி / மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளை... நகை வியாபாரியிடம் சினிமா பாணியில் முகமூடிக்கும்பல் கைவரிசை

மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளை... நகை வியாபாரியிடம் சினிமா பாணியில் முகமூடிக்கும்பல் கைவரிசை

கொள்ளை

கொள்ளை

நகை வியாபாரியை மர்மநபர்கள் காருடன் கடத்திச் சென்று சினிமாபாணியில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்லை அருகே நகை வியாபாரி மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, இரும்பு கம்பியால் தாக்கி ஒன்றரை கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை டவுன் பகுதியில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் என்பவர் தங்க நகை மொத்த விற்பனை மற்றும் தர பரிசோதனை கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது மொத்தமாக தங்கம் வாங்கும் இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது வீட்டில் இருந்து பணத்துடன் கார் மூலம் கேரள மாநிலத்திற்குச் சென்றுள்ளார்.சுஷாந்த் பணத்துடன் நகை வாங்கச் செல்லும் தகவல் அறிந்த மர்மநபர்கள் சிலர் 2 கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது காரை வழிமறித்து கும்பல், கார் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து உடைத்ததுடன், சுஷாந்த் காரில் வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணத்தையும் திருட முயன்றனர். அப்போது பின்னால் வந்த சொகுசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் இந்த கொள்ளைச் சம்பவத்தைப் பார்த்ததும் கூச்சலிட ஆரம்பித்தனர்.

இதனால் மர்மநபர்கள் சுஷாந்தை அவர் வந்த காருடன் கடத்திச் சென்றனர். நாங்குநேரி டோல்கேட் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றனர். அங்கு காரில் இருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சுஷாந்தையும், காரையும் அங்கேயே விட்டு விட்டு தங்களது காரில் தப்பியோடினர்.

இதையும் வாசிக்கமாற்றுத்திறனாளி என்பதால் வேலை தர மறுத்த நிறுவனங்கள்.. தன்னம்பிக்கையுடன் உணவு டெலிவரி செய்யும் நெல்லை இளைஞர்..

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் பட்டப்பகலில் கொள்ளையை அரங்கேற்றிய கும்பலைப் பிடிக்க நாங்குநேரி டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கொள்ளை நடந்த பகுதிகளிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், காரின் பதிவெண் உள்ளிட்டவற்றை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டார். சுஷாந்த் ஓட்டி வந்த காரில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்

பட்டப்பகலில் காரில் சென்று கொண்டிருந்த நகை வியாபாரியை மர்மநபர்கள் காருடன் கடத்திச் சென்று சினிமாபாணியில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Robbery