திருநெல்வேலி அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டி பகுதியில் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த நடுகல்லை அப்பகுதி மக்கள் தொடாமல் விலகியே இருந்துள்ளனர்.
பேட்டை மதிதா இந்துக்கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் இரா இலக்குவன் ஆய்வு மாணவர்கள் சா.இம்மானுவேல் சி.சாமி ராஜன் ஆகியோர் தெற்கு அச்சம்பட்டி அருகே உள்ள தேவர் குளம் கழுகுமலை சாலை ஓரத்தில் போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு எழுப்பப்பட்ட பழமையான நடுகல்லை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தமிழ் துறை பேராசிரியர் இரா.இலக்குவன் கூறுகையில், இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுவது தமிழர்களின் மரபு. தமிழர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பண்பாட்டுக் குழுக்களுக்கும் இதே மரபுதான். எனவே பெரும்பாலும் கிடைக்கப் பெறுபவை நினைவுச் சின்னங்களாகவும் ஈம சின்னங்களாகவும் உள்ளன .
ஈம சின்னங்களில் மிக முக்கியமானது நடு கல். இதனை வீரக்கல் என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் இது வீரத்தின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட கல்லாகும் ஒரு போரிலே வீர மரணமடைந்த வீரனுக்கு எழுப்பப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் நடுகல் பற்றிய குறிப்பும், அதன் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன.
3000 ஆண்டு பழமையான நடுகற்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை.
தெற்கு அச்சம்பட்டி அருகே உள்ள தேவர் குளம் கழுகுமலை சாலை ஓரத்தில் போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு எழுப்பப்பட்ட பழமையான நடுகல்லை கண்டுபிடித்தோம். அதனை அப்பகுதி மக்கள் ஏழு பிள்ளைத்தாட்சிகல் என்று அழைத்துள்ளனர்,
அதனை யாரும் தொடாமல் விலகியே இருந்துள்ளனர். இதற்கு ஒரு கதையும் கூறுகின்றனர், அதாவது பெண் ஒருவர் வறுமையின் காரணமாக ஏழு பிள்ளைகளையும் கொன்று அவளும்அதே இடத்தில் இறந்ததாகவும், அதனால் எழுப்பப்பட்ட கல்தான் இது என்றும் அப்பகுதியினர் கூறிவந்துள்ளனர்.
ஆனால் அங்கு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது நடுகல் என்று. அந்த கல் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது. மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், பொறிக்கப்பட்டிருப்பது ‘தார் கண்டன்’ என தெரிகிறது என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nellai, Tirunelveli