திருநெல்வேலியில் தந்தையை இழந்து தவித்த நிலையிலும் 10-ம் வகுப்புத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாணவர் அர்ஜூன் பிரபாகர் சாதனைப் படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். அவரது மகன் அர்ஜுன் பிரபாகர். திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் ம.தி.தா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்துவிட்ட போதிலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து சிறப்பாக படித்து வந்துள்ளார்.
போதிய குடும்ப வருமானம் இல்லாத நிலையில் தாய் கூலி வேலை செய்துவந்துள்ளார். குடும்ப செலவிற்கே வருமானம் போதாத நிலையில் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆசிரியர்கள் செய்து வந்துள்ளனர். பள்ளியில் சிறப்பாக படித்து வந்த மாணவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில் அவர் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியல் 100 என மதிப்பெண்கள் அவருக்கு கிடைத்துள்ளது. இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
ஆசிரியர்களும் பெற்ற தாயும் பெருமை கொள்ளும் வகையில் அவரது மதிப்பெண்கள் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல. மகாகவி பாரதியார் பயின்ற இந்த பள்ளியை சேர்ந்த மாணவர் மாவட்ட அளவில் முதலாவது மதிப்பெண்ணை பெற்று பெருமை அடைய செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam Result, Tirunelveli