கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்பம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கும் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கத்தின் நிறுவன தலைவரான லட்சுமி வாசன் கூறுவதை இந்த தொகுப்பில் காணலாம்.
RTE திட்டம் :
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இலவசமாக கல்வி அளிக்கப்பட்டு வந்தாலும் தங்களது குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் பல பெற்றோர்களுக்கு உண்டு. இதற்காக தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் இன்றி இலவசமாக படிப்பதற்கு என்று RTE ( Right to Education ) திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் LKG, ஒன்றாம் வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் மாணவர்கள் இலவசமாக கல்வி பெற ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டம்- 2009 ன் படி நலிந்த மற்றும் பின் தங்கிய வகுப்பு குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் இலவசமாகக் கல்வி பெற 25% சேர்க்கை வழங்கப்படுகிறது. அதாவது, சிறுபான்மை அல்லாத எல்லா பள்ளிகளும் தங்களது மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீதத்தை நலிந்த மற்றும் பின் தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இத்திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்.
இலவச கல்வி :
6 முதல் 14 வயது வரையிலான சிறுவர்-சிறுமியர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தில் சிறுவர்களை சேர்க்கும் பொழுது முழுமையாக அனைத்து கட்டணங்களும் இலவசம் இல்லை. இத்திட்டத்தில் கீழ் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு கல்வி கட்டணம் மட்டுமே அரசால் வழங்கப்படும். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள, பள்ளி வேன், உள்ளிட்ட செல்வுகளை பெற்றோர்கள் செலுத்த வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் விதிக்கும் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும்.
பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்களை இழந்த குழந்தை, தூய்மைப் பணியாளர்களின் குழந்தை, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தை, திருநங்கையர்களின் வளர்ப்புக் குழந்தை ஆகியவர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களின் கீழ் கல்வி கட்டணம் இன்றி இலவசமாக கல்வி பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மட்டுமே RTE திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
இத்திட்டத்தில் சிறுவர்களை சேர்ப்பதற்கு தற்போது எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான விண்ணப்ப மட்டுமே பெறுவதற்கான செயல்முறை நடைமுறையில் உள்ளது. விண்ணப்பிக்கும் பள்ளியில் முதல் வகுப்பாக எல்கேஜி இருந்தால் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெறலாம் . பள்ளியில் ஒன்றாம் வகுப்பு தான் ஆரம்ப வகுப்பு என்றால் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெறலாம்.
இரண்டாம் வகுப்பு முடித்து 3ம் வகுப்பு செல்லும் சிறுவர்களின் பெற்றோர்கள் தற்போது புதிதாக இச்சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் பயில இடம் கோர முடியாது. எனவே, உங்கள் குழந்தையை RTE சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், LKG அல்லது 1ம் வகுப்பிலேயே சேர்க்கை பெற வேண்டும். அப்படி சேர்க்கைப் பெற்ற குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் இலவசமாக கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்த திட்டத்தில் சிறுவர்களை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக ஐந்து பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம் . ஒரு பள்ளியில் 25% இடம் மட்டுமே RTE திட்டத்தில் ஒதுக்க முடியும் என்பதால் , உங்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் கூட போகலாம். இதற்காக அதிகபட்சமாக 5 பள்ளியில் வரை விண்ணப்பிக்க முடியும்.
தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பொழுது வீடு இருக்கும் தூரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இந்த RTE திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் . இந்த இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்கலாம்.
ஒரு பள்ளியில் 25% இடம் மட்டுமே RTE திட்டத்தில் ஒதுக்கப்படும் நிலையில் , 25%க்கும் அதிகமான விண்ணப்பம் பெறப்பட்டால் பள்ளிகளில் நேரடியாக குலுக்கல் நடைபெற்று, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு இடம் வழங்கப்படும் . இந்த குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் RTE இணைய தளத்திலும், அந்தந்த பள்ளிகளின் பெயர் பலகையிலும் வெளியிடப்படும். இந்த குலுக்களில் பள்ளி நிர்வாகம் ஒருதலைபட்சமாகவோ அல்லது சிறப்பு நிதி ஏதேனும் வாங்கிக்கொண்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க கூடாது என்ற விதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, RTE, Theni