தேனி நகர் பகுதியை சேர்ந்தவர் 42 வயதாகும் வங்கி ஊழியரான பார்த்தசாரதி. இவர் O - negative பிரிவு ரத்த வகையை சார்ந்தவர். இவர் தனது 20 வயது முதல் ரத்த தானம் செய்து வருகிறார். தற்போது வரை 69 முறை ரத்த தானம் செய்து உள்ளார் . இவரின் மனைவியும் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்.
தனது இரு குழந்தைகளையும் வளர்ந்த பின்பு ரத்ததானம் செய்ய ஊக்குவிப்பேன் என்கிறார்.
மேலும் தனது உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ள இவர் பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். தற்போது இவர் ரத்ததான முகாம்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இன்று உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் அதிக முறை ரத்தம் கொடுத்து சேவை செய்ததற்காக தேனி அரசு மருத்துவமனை கல்லூரி டீன் பாலாஜிநாதன் இவருக்கு சான்றிதழ் அளித்து கௌரவித்து உள்ளார் . மேலும் இவர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
குருதிக் கொடையில் ஆர்வம் :-
இதுவரை 69 முறை ரத்த தானம் அளித்திருக்கும் குருதிக்கொடையாளர் வி.ஆர். பார்த்தசாரதி கூறுகையில் "சாலை விபத்தில், ரத்த இழப்பு ஏற்பட்டு நிறைய பேர் உயிருக்குப் போராடுவாங்க. மருத்துவமனைக்குக் கொண்டுபோனாலும் அவங்களுக்கு ரத்தம் கொடுக்க ஆள் கிடைக்காம நிறைய பேர் இறந்து போயிருக்காங்க.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் என்னை ரொம்ப பாதிச்சது. இதுக்கு என்னால என்ன பண்ண முடியும்னு யோசிச்சேன். என்னோட 20 வயசுல ரத்த தானம் செய்ய ஆரம்பிச்சேன். எனக்கு ஓ நெகடீவ் ரத்தம். அப்போ நான் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்துகிட்டு இருந்தேன். இப்போ எனக்கு 42 வயசாகுது. வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறேன். 20 வருஷத்துக்கு மேலாக ரத்த தானம் செஞ்சுகிட்டு வர்றேன். ஆரம்பத்துல நானே நேரடியா மருத்துவமனைக்குப் போய் ரத்தம் கொடுப்பேன். கடந்த சில வருடமாக நண்பர்களோடு இணைந்து செயல்பட்டு வர்றேன். ரத்த தானம் முகாம்களையும் நடத்தி உள்ளோம்.
10 வருஷத்துக்கு முன்னாடி கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவருக்கு ரத்தம் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருந்த போது, தகவலறிந்து சென்று, ரத்த தானம் செய்தேன்.
இப்போது, அந்த பெண், நலமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். அதே பெண்ணுக்கு இரண்டாவது பிரசவத்திற்கு ரத்தம் தேவைப்படும் என்பதற்காக, என்னை அழைத்தார்கள் இரவு 1 மணிக்கு கான்வெண்ட் மருத்துவமனைக்கு சென்றேன். காலை 4 மணி வரை காத்திருந்தேன். ஆனால் ரத்தம் தேவைப்படவில்லை. ஆரோக்கியமாக இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் அந்த பெண். குழந்தையோடு அந்த பெண் குடும்பத்தினருடன், சந்தோஷமாக சென்றது, இன்றைக்கு நினைத்து பார்க்கும் போதும், மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்று பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
ஒவ்வொரு முறை ரத்தத்தை தானமாக கொடுத்த பிறகும், `ஓர் உயிரை காப்பாத்த நாமும் காரணம்’னு ஒரு நிறைவு ஏற்படும். இந்த நிறைவுதான் தொடர்ந்து ரத்த தானம் செய்ய என்னைத் தூண்டிக்கிட்டு இருக்கு. ரத்த தானம் செய்வதற்கு இன்று வரை, முழு உறுதுணையாக இருப்பவர், என் மனைவி கதிர் ஈஸ்வரி என்கிறார் பெருமையாக.
இறந்த பிறகு என்னோட உடல் உறுப்புகளை தானமாக அளிக்கவும் எழுதிக் கொடுத்திருக்கேன். எனது சகோதரனும் உடல் தானம் செய்ய எழுதிக் கொடுத்திருக்கிறார். என் மனைவி கதிர் ஈஸ்வரியும், ரத்த தானம் பண்ணுவாங்க. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. அவங்க வளர்ந்த பிறகு அவங்களையும் ரத்த தானம் செய்ய ஊக்குவிப்பேன்.
இந்த உலகத்துலேயே பெரிய விஷயம் ஒரு உயிரைக் காப்பாத்துறதுதான். அதுக்கு நாமும் ஒரு காரணமா இருக்கோம்ங்கிற சந்தோஷத்தை, கோடி கோடியான காசு, பணத்தாலகூட கொடுக்க முடியாது” என்கிறார் நிறைவான குரலில்.
மேலும் ரத்த தானம் செய்தால் உடல் சோர்வடையும் இன்று பலரும் என் இரத்த தானம் செய்யாமல் இருந்து வருகின்றனர். ரத்த தானம் செய்வதால் நமது உடலில் புதிய இரத்தம் உருவாகும் அதிசயம் நடைபெறும். நான் எனது வாழ்நாள் இதுவரை ரத்த தானம் செய்வேன் . "உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்" என்கிறார் பார்த்தசாரதி.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.