ஹோம் /தேனி /

“விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்” - தேனி நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் போராட்டம்

“விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்” - தேனி நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் போராட்டம்

தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

Theni Chinnamanur | தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள முல்லை பெரியாறு ஆற்றின் அருகே உள்ள நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று அப்பிபட்டி, ஓடைப்பட்டி மற்றும் தென்பழநி பகுதிகளில் உள்ள வறண்ட நிலங்களின் பாசன வசதிக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் பெரியாற்றின் அருகே இருந்து நிலத்தின் கீழே கொண்டு சென்ற பைப் லைன்களை அப்புறப்படுத்தி தண்ணீர் கொண்டு செல்ல தடை விதித்தனர்.

மீண்டும் பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் தண்ணீர் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : போடியில் கல்லூரி மாணவர்களை தாக்கிய மது பிரியர்கள்... வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்....

இந்நிலையில், இன்று சின்னமனூரில் காந்தி சிலையிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலத்தை தொடங்கினர்.

தகவலறிந்து வந்த போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லாததால் மார்க்கையன் கோட்டை பிரிவு அருகே தடுப்பு கம்பி வேலி அமைத்து தடை விதித்தனார். ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய விவசாயிகள் போலீசார் அனுமதி தர மறுத்ததால் நெடுஞ்சாலையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்கள் வாடுகிறது :

இதுகுறித்து போராட்ட களத்தில் இருந்து விவசாயிகள் கூறுகையில் “முல்லை பெரியாற்று தண்ணீரை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மாவட்டத்தில் முல்லை பெரியாற்று தண்ணீர் செல்லாத பகுதிகளில் கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு போடி மற்றும் தேவாரம் சுற்று வட்டார பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தேனி வீரபாண்டி கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து பலி 

ஓடைப்பட்டி, அபிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு எந்த ஒரு நீர்ப்பாசன வசதியும் இல்லை. கால்வாய் வசதியும் இல்லை. மழையை நம்பியே விவசாயம் செய்து வந்தோம். மழையும் போதிய அளவு பெய்யாத காரணத்தினால் சின்னமனூர் பகுதியில் குழாய் அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால் தண்ணீரை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறி பொதுப்பணித்துறையினர் எங்களது குழாய்களை பிடிங்கி சென்றனர்.

பொதுப்பணித்துறை அதிகளிடம் எங்களது நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு வாய்க்கால் வசதி ஏற்படுத்தக் கோரியும் முறையிட்டோம் அல்லது மீண்டும் குழாய்களை பதித்து தர கோரிக்கை வைத்தோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியின்றி இன்று தர்ணா போராட்டம் செய்து வருகிறோம் . தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திடீரென ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சின்னமனூர் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni