Home /theni /

வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில் திருவிழா - 7 நாள் நிகழ்ச்சிகள் விவரம்..

வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில் திருவிழா - 7 நாள் நிகழ்ச்சிகள் விவரம்..

வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில்

வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில்

Theni Veerapandi Gowmariamman Temple Festival 2022: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கிய தேனி வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில் திருவிழாவில்  ஏழு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

  தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில் திருவிழா நேற்று முதல் தொடங்கி மே 17-ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, சிறப்பு பேருந்து, ராட்டினம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  வீரபாண்டி திருவிழா :-

  தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ஏப்ரல் 20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

  நேர்த்திக்கடன் :-

  வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடி, அக்னி சட்டி காவடி, பூக்குழி மிதித்தல் ஆயிரம் கண் பானை எடுத்தல், போன்ற வழிகளில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும்  பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிவது உண்டு . ஏழு நாட்கள் 24 மணி நேரமும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது இக்கோவிலின் சிறப்பாகும்.

  ஒவ்வொரு ஆண்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்வர். ஆனால் இந்தாண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் கோவில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் திருவிழா நடைபெறும் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் அம்மனை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
  அதுமட்டுமல்லாமல் ஏழு நாட்கள் பொதுமக்களை கவரும் விதமாக ராட்டினம் வண்ண விளக்குகள் ஏராளமான கடைகள் உள்ளிட்டவைகளும் இத்திருவிழாவில் அடங்கும்.

  நிகழ்ச்சிகள் :-

  மே 10ஆம் தேதி தொடங்கும் இத்திருவிழாவில் முதல் நாளில்  கௌமாரியம்மன் மலா் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், மே 11-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

  அதனைத் தொடர்ந்து மே 13-ஆம் தேதி கோயில் திருத்தேர் வடம் பிடித்தல், மே 14, 15 ஆகிய தேதிகளில் ரத வீதியில் தேரோட்டம், மே 16-ஆம் தேதி தேர் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தேர் தடம் பாா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் கௌமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

  போலீசார் கண்காணிப்பு :-

  கோவிலில் பக்தர்கள் அதிகளவில் அக்னிசட்டி எடுத்து வருவதால் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக 24 மணி நேரமும் தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருவிழா சமயங்களில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக கோயில் வளாகம் மற்றும் சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் கோயில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள், வீரபாண்டி பிரதானச் சாலை, முல்லைப்பெரியாற்றங்கரை யோரங்களில் காவல் துறை சாா்பில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

  சிறப்பு பேருந்துகள் இயக்கம் :-

  திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் வருகை தருவதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவிலின் இரு பகுதிகளிலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .

  தேனி - கம்பம் இடையே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மே 17-ஆம் தேதி வரை உப்புக்கோட்டை விலக்கிலிருந்து குச்சனூா், மாா்கையன்கோட்டை, சின்னமனூா் வழியாகவும், உப்பாா்பட்டி விலக்கிலிருந்து தப்புக்குண்டு, நாகலாபுரம், அரண்மனைப்புதூா் வழியாகவும் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது .

  செய்தியாளர் : சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி