தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா மே 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது . உலகப் புகழ்பெற்ற இத்திருவிழாவில் கௌமாரி அம்மனை தரிசிக்க உள்ளூரைச் சேர்ந்த பக்தர்கள், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இங்கே பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை, காவடி எடுத்தல், அக்னி மிதித்தல், அலகு குத்துதல் போன்ற பல்வேறு வழிகளில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அவ்வாறு கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் வீரபாண்டி முல்லை பெரியாற்றில் நீராடி, முல்லைப் பெரியாற்றில் அம்மனை வழிபட்டு அங்கு சாதம் படைத்தும் அம்மனை தரிசிப்பர். நேர்த்திக் கடனுக்காக முல்லைப் பெரியாற்றில் பலரும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்வதால் அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.
ஆற்றுப் பகுதி முழுவதும் நெகிழிப் பைகள் காகிதம், உடைந்த பானை, மது பாட்டில்கள், பூக்கள் என ஆற்றுப் பகுதி முழுவதும் அசுத்தம் அடைந்து காணப்பட்டது.
இதனால் வீரபாண்டி முல்லைப் பெரியாறு கரையோரம் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் உள்ள கழிவுப்பொருட்களை நீக்குவதற்காக தேனி மாவட்டத்தில் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து ஆற்றுப் பகுதி மற்றும் கரையோர பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பசுமை செந்தில் ஏற்பாட்டின் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள், விவசாய சங்கத்தினர் ஒருங்கிணைந்து குப்பைகளை முழுவதுமாக அகற்றினர்.
இந்த களப்பணியில் நாம் தமிழர் கட்சி, முல்லை சாரல் விவசாய சங்கம், இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பாரதிய கிஷன் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு கட்சி வேறுபாடின்றி அனைவரும் தன்னார்வலராக ஒருங்கிணைந்து இந்த களப்பணியை செய்தது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.