உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹளதியா கல்லூரியின் 66 வது விளையாட்டு விழா தொடக்க விழா
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர் ஹளதியா கல்லூரியில் 66 ஆவது ஆண்டு விளையாட்டு விழா தொடக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. உணவு உண்ணும் போட்டி, தடகள போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கப்பட்டது.
உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான ஹாஜி கருத்தராவுத்தர் ஹளதியா கல்லூரியில் மாபெரும் விளையாட்டு விழாவின் தொடக்க விழா நடை பெற்றது. இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 நாட்கள் கல்லூரி ஆண்டு விழா நடைபெறும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரி முழுமையாக இயங்காததால், இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கல்லூரி ஆண்டு விழா இன்று முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விளையாட்டு தினம், மகளிர் தினம், தமிழ் துறை, கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டி நடனம் உள்ளிட்ட ஒவ்வொரு நாளும் விதவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதில் கல்லூரியின் ஆட்சிமன்ற குழு செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி. M. தர்வேஷ் முகைதீன் மற்றும் கல்லூரியின் மேலாண்மை குழு தலைவர் ஜனாப். S. செந்தால் மீரான், கல்லூரியின் முதல்வர் ஹாஜி டாக்டர். H. முகமது மீரான் முன்னிலையில் கல்லூரி மைதானத்தில் கல்லூரி விழாவின் தொடக்க நாளான விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
உடற்கல்வி இயக்குனர் டாக்டர். அக்பர் அலி வரவேற்புரை வழங்கி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை அறிமுகப்படுத்தி அணிவகுப்பை தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் :-
விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக வண்ண மலர்கள் மற்றும் காகிதங்கள் தூவியும் புறாக்களை பறக்க விட்டும்,
கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக ஓட்டப்பந்தயம் ,நீளம் தாண்டுதல் ,ஈட்டி எறிதல் ,குண்டு எறிதல் ,போன்ற தடகள போட்டிகள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.
மேலும் இம்மாபெரும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கபடி, கோ கோ, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து , பூப்பந்து , கால்பந்து, கிரிக்கெட் , டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கேரம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் வரக்கூடிய ஒரு மாத காலம் நடைபெறும் என்பது
குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரி பேராசிரியர்களுக்கு உணவு உண்ணும் வித்தியாச போட்டியும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், முன்னாள் முதல்வர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கல்லூரியின் முதல்வர் முகமது மீரான் கூறுகையில் , " இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இப் போட்டி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் நோக்கமானது கொரோனா போன்ற நோய்தொற்று காலங்களில் மாணவர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காகவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடைபெறுகிறது. இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் டாக்டர் B.அக்பர் அலி அவர்கள் சிறப்பாக ஏற்படுத்தி ஒருங்கிணைத்தார். இக்கல்லூரி சமீபத்தில் தேசிய தர மதிப்பீட்டில் A மதிப்பீட்டை பெற்றதற்கு கல்லூரியின் விளையாட்டுத்துறையும் ஒரு முக்கிய காரணம் ஆகும். விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது போன்ற விழாக்கள் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றார்.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.