Home /theni /

தேனியில் கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தேனியில் கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனியிலுள்ள கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கத் தடை தொடர்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தற்போது, சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் அதிக தண்ணீர் வருவதால், அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு நீர்நிலைகளிலும் மழை நீர் ஆப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. அதனால் சில சுற்றுலா இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக இங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுருளி அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 31ந் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போதும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவிதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஹைவேவிஸ் மலைபகுதி யில் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தூவானம், இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டித்து வனத்துறையினர் அறிவித்தனர். நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி