ஹோம் /தேனி /

என்.ஐ.ஏ கைது செய்த நபர்களை விடுதலை செய்யாவிடில் போராட்டம்- தேனி இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

என்.ஐ.ஏ கைது செய்த நபர்களை விடுதலை செய்யாவிடில் போராட்டம்- தேனி இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

தேனி

தேனி இஸ்லாமியர்கள் போராட்டம்

தேனி மாவட்டத்தில் என்.ஐ.ஏ அமைப்பின் கைது நடவடிக்கையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uthamapalayam, India

தேசிய புலனாய்வு முகமை கைது செய்த நபர்களை விடுதலை செய்யா விடில் தேனி மாவட்டத்தில் மாபெரும் ஜனநாயக வழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்பை சேர்ந்த நபர்களை NIA கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்.ஐ.ஏ சோதனை

நேற்று முன் தினம் செப்டம்பர் 21-ஆம் தேதி தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களிலும் NIA என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.

தேனி இஸ்லாமியர்கள் போராட்டம்

தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் சோதனை செய்தனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள முத்துத்தேவன்பட்டி மதரஸாவிலும், கம்பம் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த யாசர் அரஃபாத் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதனையடுத்து விசாரணைக்காக யாசர் அரபாத் என்பவரை NIA அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

தேனி இஸ்லாமியர்கள் போராட்டம்

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பலர் கைது

கேரளாவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்த பின்பு இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பாக என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலை செய்ய கோரியும் என்.ஐ.ஏ அமைப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் என் ஐ ஏ வை எதிர்த்தும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ஜனநாயக வழி ஆர்ப்பாட்டம்

இது குறித்து உத்தமபாளையம் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சௌபர் சாதிக் கூறுகையில், ’NIA அமைப்பு ஒருதலைபட்சமாக செயல்பட்டு இஸ்லாமிய நபர்களை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் எங்கு வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர் என்ற விவரங்களை வெளியிடவே இல்லை. கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

இந்த செயல் இஸ்லாமிய அமைப்பினர் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய செயலாக உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த போராட்டம் நடைபெற்றது . என்.ஐ.ஏ அமைப்பினர் கைது செய்த நபர்களை விடுதலை செய்யாவிடில், தேனி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஜனநாயக வழி ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni