Home /theni /

ஊருக்குள் நுழையும் யானைகள் - நடவடிக்கை எடுக்க தேனி மலையடிவாரப் பகுதி மக்கள் கோரிக்கை

ஊருக்குள் நுழையும் யானைகள் - நடவடிக்கை எடுக்க தேனி மலையடிவாரப் பகுதி மக்கள் கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதிகளில் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால், மலைப் பகுதியை ஒட்டியுள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

காட்டுயானைகள்

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது தேனி மாவட்டம். குறிப்பாக போடி, கம்பம், கூடலூர், தேவாரம், கோம்பை, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப் என மலையடிவாரங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ஆகும்.

இந்நிலையில், வனப்பகுதியில் வசிக்கும் காட்டு விலங்குகளான மான், யானை போன்ற விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரங்களில் சுற்றித் திரிகின்றன.

இதனை தடுப்பதற்காக வனத்துறையினரால் மலையடிவார வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலிகள், அகழிகள் வெட்டப்பட்டும் உள்ளது. இதனால் காட்டு விலங்குகள் அகழிகளை கடந்து வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வராமல், திரும்ப வனப்பகுதிகளுக்குள் சென்று விடும். இருந்தபோதிலும் சில காட்டு விலங்குகள் ஊர் பகுதிக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

அச்சத்தில் மக்கள்

தேனி மாவட்டத்தில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. சின்னமனூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி, நரி போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில் மட்டும் காட்டு யானையால் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள பழியங்குடி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மேலும், கூடலூர் அருகே உள்ள மின் நிலையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப் போன்ற மலையடிவார பகுதிகளை ஒட்டி காட்டு விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விளைநில பயிர்களை
சேதப்படுத்துவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மின் நிலையம் :-

கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்தில் 70 குடும்பங்களுக்கு மேலாக மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு ஜெனரேட்டர் உள்ளது. மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மின் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மட்டுமே யானைகளின் அட்டகாசம் இருந்து வந்தது. இரவில் குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானை அதிகாலை நேரத்தில் காட்டுக்குள் சென்று விடுவதை வழக்கமாக வைத்து இருந்தது. ஆனால் தற்போது பகல் நேரத்திலும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் தொந்தரவு அதிகமாகியுள்ளன எனக் கூறப்படுகிறது. பகலில் ரோட்டிலேயே உலா வருவதால் பணியாளர்கள் வெளியில் செல்ல முடிவதில்லை எனவும் குடியிருப்புகளை சுற்றி யானைகள் முகாமிட்டு வருவதாகவும், இரவு அவசரப் பணிக்காக குடியிருப்பில் இருந்து மின் நிலையத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் நிலையத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து லோயர் கேம்ப், சுருளியாறு மின்நிலைய பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், ‘காட்டு விலங்குகள் வராமல் அமைக்கப்பட்ட மின் வேலிகள் ஆங்காங்கே அறுந்து கிடப்பதால், யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும், மின் வேலிகள் தாழ்வான நிலையில் இருப்பதால் எந்நேரமும் வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, வனத்துறையினர் மின் வேலியை சரி செய்யவும், காட்டு விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறோம்’ என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி