தேனி மாவட்டம் குமுளிக்கு செல்லும் சாலையில் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகளும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குமுளி மலைச்சாலை
தமிழக மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது குமுளி. தமிழக மற்றும் கேரளாவை இணைக்க கூடிய மிக முக்கிய சாலையாக திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் லோயர் கேம்ப் முதல் குமுளி வரை ஆறு கிலோமீட்டர் தூரம் பல ஆபத்தான வளைவுகளை கொண்ட மலை வழிச் சாலையாக உள்ளது. இரு மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக குமுளி மலைச்சாலை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் இயங்கக்கூடிய சாலையாக உள்ளது.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் செல்கின்றன. தமிழகத்திலிருந்து காய்கறிகள் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல கேரள மாநிலத்தில் இருந்தும் ஏலக்காய் மற்றும் நறுமண பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த லோயர் கேம்ப் முதல் குமுளி மலை வழிப்பாதையில் எப்போதும் குளுமையான காற்றும் லேசான சாரல் மழையும் இருப்பது வழக்கம். தற்போது தமிழக மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தாக்கம் இருப்பதால் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை சாலையில் கடும் பனிமூட்டம் நிலை வருகிறது.
கடும் பனிப்பொழிவு
தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் மாலை வேளையில் பெய்யும் மழை காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பரபரப்புடன் இயங்கக்கூடிய தமிழக மற்றும் கேரள மாநிலத்தை இணைக்கும் மிக முக்கிய சாலையான குமுளி மலை வழிச்சாலையில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் பகல் நேரத்திலும் கூட வாகனங்கள் முகப்பு வழக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன.
ஆபத்தான பல வளைவுகள் கொண்ட குமுளி மலைச்சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை கண்ணுக்குத் தெரியாததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர்.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலையாட்கள் கூடலூர் கம்பம் லோயர் கேம்ப் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து செல்கின்றனர். தினசரி காலை ஐந்து மணி முதல் 7:00 மணி வரை நூற்றுக்கணக்கான வேலையாட்களை ஏற்றிசெல்லும் வாகனங்கள் செல்கின்றன. கடும் பனிப்பொழிவு காரணமாக வேலை ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், சரக்கு வாகன ஓட்டிகளும் பேருந்து மற்றும் கனரக வாகன ஓட்டிகளும் கடும் பனிப்பொழிவால் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் குமுளி மலைச்சாலை வழியே செல்கின்றனர் .
போக்குவரத்து நெரிசல்
தற்போது சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாகனத்தில் வரும் சபரிமலை பக்தர்கள் கடும் பனிப்பொழிவில் வாகனத்தை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் பனிப்பொழிவு காரணமாக சாலை தெரியாத காரணத்தினால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து காத்திருக்கும் சூழல் உள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக இரு சக்கர வாகனம் எதிரே வருவது கனரக வாகன ஓட்டிகளுக்கு தெரியாத நிலை ஏற்படுவதால் கனரக வாகன ஓட்டிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையாக வாகனத்தை இயக்குமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni