Home /theni /

Theni | தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்க கோரி கையெழுத்து இயக்கம்- தேனி விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

Theni | தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்க கோரி கையெழுத்து இயக்கம்- தேனி விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

தேனி விவசாயிகள்

தேனி விவசாயிகள்

Theni | முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் திட்டமிட்டு நடத்தப்படும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தேனியில் விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஒருமைப்பாட்டையே சீர்குலைக்கும் நச்சு சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால், கர்நாடகத்திலுள்ள பெல்காமில் நடப்பதைப்போல, மேற்கு வங்கத்தின் கூர்க்காலாந்தில் நடப்பது போல, தேவிகுளம் பீமேட்டிலும் பிரிவினை முழக்கங்கள் எழும்பும் என பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளன.

முல்லைப் பெரியாறு அணை சர்ச்சை

தமிழகம் - கேரள மாநிலம் இடையே நீண்ட காலமாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனையும், சர்ச்சையும் நீடித்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள மாநிலத்தில் பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், முல்லைப் பெரியாறு அணை விவரம் பற்றியும், அணை உடைந்தால் கேரள மக்கள் சந்திக்கும் பாதிப்புகள் பற்றியும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆவணப் படம் எடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்வர் பாலசிங்கம் மற்றும் சங்கத்தின் தலைவரான சலேத்து பேசும்போது, ‘கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, பத்தனம் திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி, Save Kerala Brigade என்கிற மலையாள அமைப்பு நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

Decommission Mullaperiyar or Demolished Mullaperiyar என்று அட்டவணை இடப்பட்ட பத்திரத் தாளில், நாட்டின் பிரதமருக்கு 10 லட்சம் கையெழுத்தை அனுப்பும் இயக்கத்தை ஆரம்பித்த இந்த இயக்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ரசல் ஜோய், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை 8,44,185 பேர் கையெழுத்திட்டிருப்பதாகவும் இனி குறைவாகவே வாங்க வேண்டியதிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், முல்லைப் பெரியாற்றின் விவரங்கள் குறித்து 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும், இதற்காக 30 லட்சம் ரூபாய் தேவை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த ஆவணப்படம் வரவிருப்பதாகவும் கூறி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ஆவணப்படம் எடுப்பதற்காக 30 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படவிருக்கும் பேரழிவிலிருந்து கேரளாவில் உள்ள 40 லட்சம் மக்களை காப்பதற்காக, பணத்தை அள்ளித் தருமாறு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும், வழக்கறிஞர் ரசல் ஜோய், ஒரு அமைப்பையும் ஆரம்பித்து வங்கி கணக்கு மூலமாக லட்ச கணக்கில் வசூல் செய்ய முயற்சி எடுத்து இருப்பது, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளது.

நடவடிக்கை தேவை

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று கடந்த 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு தீர்ப்பை, தெளிவாக கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, ரசல் ஜோய் நடத்தி வரும் இந்த பிரச்சாரத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து மேற்கண்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும்.

தேசியப் புலனாய்வு அமைப்பு(என் ஐ ஏ) இந்த விசயத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, மேற்கண்ட கும்பலை ஒடுக்கவில்லை என்றால், விரைவில் தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் தமிழகத்தோடு சேர்க்கச் சொல்லி தென் தமிழகத்தில் பிரச்சார இயக்கத்தை தொடங்குவதற்கு ஆயத்தமாவோம் .

நிலவியல் ரீதியாக மேற்கண்ட மூன்று தாலுகாக்களும், 1956 ஆம் ஆண்டுக்கு முன்னாள் மதுரை ஜில்லா பெரியகுளம் தாலுகாவோடு இணைந்திருந்த பகுதிகள்தான். அந்த அடிப்படையில் மேற்கண்ட மூன்று தாலுகாக்களின் மீதும் உரிமை கோருவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் தேங்கும் வெறும் 10.5 டிஎம்சி தண்ணீருக்கு எதிராக, இத்தனை திரிபு வாதத்தை பரப்பி வரும் நபர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்களே ஆவர்.

தமிழக முதல்வர், இந்த விஷயம் குறித்து கேரள மாநில முதல்வருக்கு தகவல் கொடுத்து தவறான பிரச்சாரங்கள் பரப்புவதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுக்காவிட்டால் தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பஞ்சோலை ஆகிய தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்க கோரி நாங்களும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குவோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி