Home /theni /

Theni | சாலை அகலப்படுத்தும் பணிகளால் விபத்து - குற்றம்சாட்டும் விவசாயச் சங்கங்கள்

Theni | சாலை அகலப்படுத்தும் பணிகளால் விபத்து - குற்றம்சாட்டும் விவசாயச் சங்கங்கள்

தேனி சாலை விரிவாக்கப் பணி

தேனி சாலை விரிவாக்கப் பணி

Theni | தேனியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நெடுஞ்சாலைப் பணிகளால் விபத்துகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெடுஞ்சாலைப் பணிகள் :-

தேனி மாவட்டம் சின்னமனூர் முதல் கூடலூர் வரையிலான மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் நடைபெற்று வருகிறது.

கூடலூர் நகர்ப் பகுதியில் சாலையை அகலப்படுத்தி சாலையில் செல்லும் வாகனங்களை பிரிக்கும் விதமாக சென்டர் மீடியன் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இதற்காக சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கூடலூரில் வடக்கு பகுதியிருந்து தெற்கு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம், சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவே 1 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் சுவர், அதிலிருந்து இருபுறமும், தலா 16.50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது.

அதற்காக சாலையின் இருபுறமும் உள்ள 100 க்கும் மேலான மின்சார கம்பங்கள், 20 க்கும் மேலான மின்சார மாற்றிகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு கடிதம் எழுதி அதற்கான செலவு மதிப்பீடுகளை கேட்டுள்ளனர். அதே போல் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை அகற்ற கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இரு தரப்பிலும் அஞ்சலை துறையினர் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இருந்த போதிலும் நெடுஞ்சாலை துறையினர் மரம் மற்றும் மின் கம்பங்கள் இல்லாத இடங்களில் பணிகளை ஆரம்பித்துள்ளனர். கூடலூர் பகுதியில் ஆங்காங்கே நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணிகளால் உள்ளூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அவ்வப்போது விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

கோரிக்கை :-

இந்த நிலையில் நேற்று கூடலூர் முல்லைச் சாரல் விவசாய சங்கத்தின் உறுப்பினரான வீரபாபு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், பேருந்து ஓட்டுனரின் கவனக் குறைவாலும் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வீரபாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து இன்று முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் நெடுஞ்சாலைத் துறையினரின் பணிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறையினர் பாரபட்சம் காட்டுவதாகவும், குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் எனவும், மேலும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் சாலையை மறித்து லோடு வாகனங்கள் நிறுத்தப்படுவதை காவல்துறையினர் முறைபடுத்தி , லோடு வாகனங்கள் மாற்று இடத்தில் நிறுத்தப்பட்டு காய்கறி லோடுகளை ஏற்றி அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து உள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி