தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள பொறியாளர் முகமது அப்துல்லா அவரது சொந்த வீட்டை RRR செட்டப்பில் தலைமுறை கடந்தும் மதிப்பு குறையாத வகையில் வீட்டைக் கட்டியுள்ளார்.
RRR முறையில் கட்டப்பட்ட வீடு
20 வருடங்களுக்கும் மேலாக பொறியாளராக இருந்து வரும் முகமது அப்துல்லா, தனது சொந்த வீட்டை வித்தியாசமான முறையில் கட்டுவதற்கு யோசித்துள்ளார். அதன் அடிப்படையில் வீட்டை அழகாகவும் பழைய பொருட்கள் வைத்தும் செலவை குறைக்கும் வகையிலும் காம்போசிட் ரெட்ரோ ஸ்ட்ரக்சர் ( COMPOSITE RETRO STRUCTURE) வடிவமைப்பில் ஆன வீட்டைக் கட்டி உள்ளார்.
RRR அதாவது REDUCE, REUSE AND RECYLABLE என்ற அடிப்படையில் புதிய வீட்டை கட்டுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்புள்ள பொருட்களையும் பயன்படுத்தி செலவு குறைந்த வகையில் கட்டப்பட்ட வீடு என்பதன் பொருளே RRR.
ஒரு வீடு கட்டப்பட்டால் அந்த வீடு பல ஆண்டுகளுக்குப் பிறகு தேய்மானம் அடைந்து வீட்டிற்கான தேய்மானம் போக மீதி தொகை கணக்கிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வீடு அதற்கு முற்றிலும் மாறுபட்டது APPRECIABLE LIABILTY CONCEPT என்பதன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் சேதம் அடையாமல் எடுத்து புதிய வீடு கட்டுவதற்கு பயன்படுத்தலாம் என்பதாலும் ஏற்கனவே பழைய பொருட்களால் வீடு கட்டப்பட்டது என்பதாலும் தலைமுறை கடந்தாலும் வீட்டிற்க்கான தேய்மானம் குறையாது என்கிறார் பொறியாளரான முகமது அப்துல்லா.
தேய்மானம் அடையாத வீடு
720 சதுர அடியில் மூன்று மாடிகள் கொண்டு கட்டப்பட்டு உள்ள இந்த வீட்டில் பெரும்பாலான பகுதிகள் பழைய பொருட்களால் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் சுற்றுச்சுவர் ஏற்கனவே இருந்த கட்டிடத்தை இடிக்கும் பொழுது அதன் பேஸ்மட்டத்தில் இருந்து எடுத்த கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
வீட்டின் பால்கனி, பால்கனி கைப்பிடிகள் பயன்படுத்தப்பட்ட மூங்கில் மரம், தென்னை மரம் மற்றும் இரும்பு கயிறினால் கட்டப்பட்டுள்ளது. கிரைண்டர் பயன்படுத்தும் போது வீணாகும் கற்களை கொண்டு வீட்டின் வெளிப்புற சுவர் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதி முழுவதும் பயன்படுத்தப்பட்ட டெரகோட்டா கற்களால் கட்டப்பட்டது. வீட்டில் சுவர் முழுவதும் மோல்டு செய்யப்பட்ட மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று வீட்டின் அனைத்து பகுதிகளிலும் ஏதேனும் ஒரு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து கட்டப்பட்டதாகும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த வீட்டை இடித்துவிட்டு வேறு வகையான வீடு கட்ட வேண்டும் என்றால், வீடு கட்டப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக சேதம் இல்லாமல் எடுத்து விடலாம் என்கிறார் பொறியாளர். அதே பொருட்களை வைத்து புதிதாக வேறு வடிவிலான வீடுகளையும் கட்ட முடியும் எனவும் கூறுகிறார்.
நுணுக்கமான தொழில்நுட்ப வேலைகள் இருப்பதால் திறமையான தொழிலாளர்களைக் கொண்டும், நல்ல திட்டத்தை வைத்தும், இந்த வீடு கட்ட வேண்டும் எனவும் இது போன்ற வடிவிலான வீடு கட்டும் பொழுது இடம் மீதமாகும் எனவும் விருப்பத்திற்கு ஏற்ப வீடுகளை வடிவமைக்க முடியும் எனவும் கூறுகிறார். பொருட்கள் அதிகம் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள வீடு என்பதால் பராமரிக்க வேண்டியது அவசியம் எனவும், வீட்டிற்கான பாதுகாப்பு இரு மடங்கு உள்ளது எனவும் கூறுகிறார் வீட்டின் உரிமையாளர் மற்றும் பொறியாளர் ஆன முகமது அப்துல்லா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni