Home /theni /

Theni | தோனிக்கு மட்டுமல்ல நம்மவூரு தேனிக்கும் இன்று பிறந்தநாள்- சிறப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்...

Theni | தோனிக்கு மட்டுமல்ல நம்மவூரு தேனிக்கும் இன்று பிறந்தநாள்- சிறப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்...

தேனி

தேனி

Theni | மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு இன்று நிறுவப்பட்டதால், தேனி மாவட்டத்தின் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர் அம்மாவட்ட மக்கள்.

மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு இன்று நிறுவப்பட்டதால், தேனி மாவட்டத்தின் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர் அம்மாவட்ட மக்கள். இன்று கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாள் மற்றும் தேனியின் பிறந்தநாள் என்பதால் மிகுந்த குஷியில் உள்ளனர் தேனி மாவட்ட மக்கள்.

ஜூலை 7 :-

ஜூலை 7, 1996 தேதியிட்ட அரசாணை எண் 679 வருவாய் துறையின்படி முன்னாள் மதுரை மாவட்டத்திலிருந்து தேனி தனியாக பிரிக்கப்பட்டதன் மூலம் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த பிளவுபடுத்தலின் விளைவாக, உத்தமபாளையத்தில் தலைமையகத்துடன் ஒரு புதிய வருவாய் பிரிவு மற்றும் தேனி மற்றும் போடிநாயக்கனூரில் இரண்டு புதிய தாலுகாக்களும் 1997 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. தேனி நகராட்சி 1996 டிசம்பர் 31 வரை ஒரு தலைமையகமாக மட்டுமே இருந்தது. இதன் விளைவாக புதிய மாவட்டம், தேனி முனிசிபல் டவுன் 1997 ஜனவரி 1 அன்று தாலுகா மற்றும் மாவட்ட தலைமையகமாக மேம்படுத்தப்பட்டது.

முல்லை பெரியாறு :-

இன்றைய தேனி மாவட்டத்தால் சூழப்பட்ட பகுதிகள் 1900களுக்கு முன்பு குறைவாகவே இருந்தது. 1886-ம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணைத் திட்டம் பெரியார் ஆற்றில் இருந்து கீழ்நோக்கி கம்பம் பள்ளத்தாக்கு வரை தண்ணீரின் ஒரு பகுதியை வாங்கி முல்லை ஆற்றில் இணைத்தது. இந்த திட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அதிகமான மக்கள் குடியேற உதவியது. 1900 களில் தேனி சிறியதாக இருந்தாலும் குறைவாக அறியப்பட்ட நகரமாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


முல்லை-பெரியார் இணைப்பு திட்டத்திற்குப் பிறகு, அருகிலுள்ள சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், சத்தூர் மற்றும் அருகிலுள்ள பல நகரங்கள் வறண்டு காணப்பட்டதால், அந்த பகுதிகளைச் சேர்ந்த பலர் கம்பம் பள்ளத்தாக்கில் குடியேறினர்.



இதனால் தேனி மாவட்டத்தில் 1890 கள் முதல் 1920 கள் வரை மக்கள் வருகை இருந்தது. போடி மற்றும் பெரியகுளம் அப்போது பிரபலமான இடங்களாக இருந்தது. போடியில் ஏலம் விற்பனை அமோகமாக இருந்ததால், தேனி மாவட்டம் வர்த்தக நகரமாக விரிவடைந்து தற்போது பிரமிக்க வைக்க வகையில் உள்ளது.

தேனி மாவட்டம்

”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, இந்த ஊருக்கும் சொந்தமானவர். இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டம் தான் தேனி மாவட்டம்.



மேலும் தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்), மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும் பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் லெனின் பாரதி ,செல்வராகவன் சிராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவும், இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் உள்ள புகழ் பெற்றவர்களை உருவாக்கியது தேனி மாவட்டம்.

இயற்கையின் கொடை

மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளான சுருளி அருவி, குரங்கணி, கும்பக்கரை அருவி, மேகங்கள் கொஞ்சி விளையாடும் மேகமலை, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு என எந்த ஒரு மாவட்டத்திற்கும் இல்லாத தனித்தும் பெற்றது இந்த தேனி மாவட்டம். ”நாலாபக்கமும் மழை சூழ்திருக்கும் நடுவுல பசுமை பூத்திருக்கும்” என்பது போல, உலகிலேயே நீண்ட மலைத் தொடரான மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்துள்ள பசுமை போர்த்திய இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாவட்டம் தேனி.



இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைத்தொடர்கள், சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, குரங்கணி, மேகமலை உள்ளிட்ட பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவத்தை உள்ளடக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளது. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ளதும், எங்கும் பசுமை போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கும். அத்துடன் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் , போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், மாவூற்று வேலப்பர் கோயில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்பட பல்வேறு ஆன்மிக சுற்றுலா தலங்களும் இங்கு உள்ளன.

சிறந்த சுற்றுலாத்தலம்

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது சுருளி அருவி. இந்த அருவி சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. சின்னமனூரிலிருந்து சில கிலோமீட்டர் மலைப் பயணமாக சென்றால் மேகங்கள் கொஞ்சி விளையாடும் மேகமலை உள்ளது. இதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் தற்போது புலிகள் சரணாலயமாக மாறியுள்ளது கூடுதல் சிறப்பு. இந்த வனப்பகுதி தமிழ் நாட்டின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக மாறியுள்ளது.



அணில்கள் சரணாலயமாகவும் உள்ளது. இந்த வனப்பகுதிகளுக்குள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தமிழக, கேரளா ஆகிய இரு அரசுகளும் இணைந்து வனத் திருடர்கள் வனக் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்டு வருவது இந்த மாவட்டத்தில் மட்டும்தான். கம்பம் என்றாலே பள்ளத்தாக்கு பகுதி என்று கூறுவர். ஆனால் இது பள்ளத்தாக்கு அல்ல பஞ்சம் தாங்கி ஊர் என்று இதற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது.

சிறப்புகள் :-

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெல் விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது தேனி மாவட்டம் . எப்போதும் குளிர்ந்த காற்று, குளுமையான சூழலை ரசிப்பவர்கள், வெளி ஊரிலிருந்து புதிதாக இங்கு வருபவர்கள் "இந்த க்ளைமேட்டில் இருந்து விட்டு திரும்பி சொந்த ஊருக்குச் செல்ல அவர்களுக்கு மனம் மறுக்கும்" என கூறுவர். உலகத்திலேயே வருடம் முழுவதும் எந்தக் காலச் சூழலுக்கும் ஏற்றவாரு கம்பம் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்புப் பன்னீர் திராட்சையின் சுவையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆதிகாலத்திலிருந்து மனிதன் பயிரிட்டப் பயிர் என திராட்சையை கூறுகிறது பைபிள், இதே போன்று குரானிலும் திராட்சையின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிக்வேதத்தில் இந்த திராட்சையின் பயன் குறித்து குறிப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிகாலத்திலேயே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த சான்றும் தமிழின் பழமையைக் கூற ஆண்டிபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு எழுத்தப்பட்டதாக கூறப்படும் புல்லிமான் கோம்பை கல்வெட்டுகள் கிடைத்த இடம் தேனி மாவட்டம். தேனி மாவட்டம் இயற்கைக்கு மட்டும் பேர் போனதல்ல இலக்கியத்திற்கும்தான் .

தோனி பிறந்தநாள் :-

எண்ணற்ற கிரிக்கெட் ரசிகர் பட்டாளத்தை கொண்ட மாவட்டம் தேனி மாவட்டம். தேனி இன்று தான் தேனி மாவட்டம் நிறுவப்பட்டது என்பதால் தேனி மாவட்ட மக்கள், தேனி மாவட்டத்தின் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில இடங்களில் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர் தேனி மாவட்ட மக்கள். மேலும் மிகவும் பிரபல நாயகன், தல என்று தமிழ்நாட்டு மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு கேப்டனுமாகிய மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் என்பதால், இன்று தேனி மாவட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி