Home /theni /

Theni | வெற்றிலை விவசாயத்தில் கலக்கும் சின்னமனூர்: வெளிமாநில ஏற்றுமதி எப்படி நடக்கிறது?

Theni | வெற்றிலை விவசாயத்தில் கலக்கும் சின்னமனூர்: வெளிமாநில ஏற்றுமதி எப்படி நடக்கிறது?

வெற்றிலை

வெற்றிலை விவசாயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chinnamanur, India
தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 30 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், சின்னமனூர் வெற்றிலை பேட்டை மூலம் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வெற்றிலை வணிகம் நடைபெற்று வருகிறது.

வெற்றிலை விவசாயம்

சுப முகூர்த்தங்கள், இல்ல நிகழ்வுகள், விசேஷ பண்டிகைகள், திருமணம், கோயில் பூஜைகள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றிலைக்கு முக்கிய பங்கு உண்டு. விழா நாட்கள் வெற்றிலையில் முடியாமல் நிறைவு பெறாது என பெரியோர்கள் பேச்சு வழக்கில் கூறுவது உண்டு. வெற்றிலை சாகுபடியில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதி எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஜெயமங்கலம், வடுகபட்டி, சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தேனி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி செய்வதற்கான பரப்பளவு குறைந்து வந்தாலும், இன்றளவும் வெற்றிலை சாகுபடியை கைவிடாமல் சின்னமனூர் பகுதி விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தை செய்து வருகின்றனர்.

வெற்றிலை பேட்டை

வெற்றிலை வணிகத்திற்காகவே சின்னமனூர் பகுதியில் வெற்றிலை பேட்டை இயங்கி வருகிறது. சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள சங்கம் வெற்றிலை பேட்டை என அழைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பல இடங்களில் வெற்றிலை பேட்டை இயங்கி வந்தாலும் சின்னமனூர் பகுதியிலேயே பெரிய அளவில் வெற்றிலை பேட்டை இயங்கி வருகிறது .

சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து வெற்றிலை அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் சின்னமனூர் வெற்றிலை பேட்டையில் உறுப்பினராக உள்ள வெற்றிலை வியாபாரிகள் தங்களது ஆட்களை வைத்து வெற்றிலை தோட்டத்திற்கு சென்று தோட்டத்திலேயே வெற்றிலையை பறித்து வருகின்றனர்.

விவசாயியிடமிருந்து வெற்றிலையை பறித்து வந்த வியாபாரிகள் வெற்றிலைப் பேட்டையில் வைத்து வெற்றிலையில் நோய் தாக்கிய வெற்றிலைகள் மற்றும் தரம் இல்லாத வெற்றிலையை பிரித்தும் , தரம் உள்ள வெற்றிலையை பிரித்தும், தற்போதைய தேவைக்கேற்ப வெற்றிலைக்கு விலை நிர்ணயம் செய்து சென்னை, சேலம், பாண்டிச்சேரி, வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெற்றிலையை விற்பனை செய்து வருகின்றனர்.

திடம், சக்கை, திடம்மாரு, சைடுபிரி போன்று வெற்றிலையில் பல ரகங்கள் உள்ளன. இதில் திடம், சக்கை ரகங்கள் பாண்டிச்சேரி, சென்னை போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. திடம்மாரு வெற்றிலையை கேரள மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துவதால் கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சைடுபிரி போன்ற ரகங்கள் உள்ளூர் பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல ஒரு குறிப்பிட்ட ரக வெற்றிலைகள் பீடா தயாரிப்பதற்கும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக கூறுகின்றனர்

இது குறித்து சின்னமனூர் வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘சின்னமனூர் வெற்றிலைப்பேட்டை 1939 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்களிடம் குறைந்த அளவிலான சந்தா தொகை வசூலிக்கப்பட்டு சங்கத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக வெற்றிலையை பறித்து வந்து தேவைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்து வருகிறோம். தேனி மாவட்டத்திலேயே பெரிய வெற்றிலைப்பேட்டை சின்னமனூர் வெற்றிலைப் பேட்டை தான். இங்கிருந்து வெற்றிலை வடமாநிடங்களுக்கும் செல்கிறது’ என்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி