தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ஏப்ரல் 20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெற நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது
இந்த ஆண்டு கௌமாரியம்மன் கோவில் திருவிழா மே 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய கௌமாரியம்மன் திருக்கோவில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
வீரபாண்டியில் ஏழு நாட்களும் பொதுமக்களை கவரும் விதமாக வண்ண விளக்குகளுடன் கூடிய ராட்டினங்கள், ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் நீராடி, அக்னி சட்டி காவடி, பூக்குழி மிதித்தல் ஆயிரம் கண் பானை, போன்ற வழிகளில் தமது நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு வீரபாண்டி கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி விட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டினத்தில் ஏறி சவாரி செய்த பின்னரே வீட்டிற்கு செல்வர்.
மின்சார விபத்து :-
வீரபாண்டி திருவிழா நேற்று முதல் தொடங்கி நிலையில் பொது மக்களுக்காக ராட்டினங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் Disco break எனும் ராட்டினத்தின் ஒரு தூண் சாய்ந்த நிலையில் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்ட உப்பார்பட்டியைச் சேர்ந்த தற்காலிய பணியாளரான 32 வயதாகும் முத்துக்குமார் என்பவரின் மீது மின்சாரம் பாய்ந்தது.
ராட்டினம் இயக்க பயன்படும் அதி உயர் அழுத்த மின்சாரம் முத்துக்குமாரின் மீது பாய்ந்தது. வீரபாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களிலும் பாதுகாப்பான முறையில் உள்ளதா என அரசு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்தார் இந்த விவகாரம் தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து ஒரு நபர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.