இன்றைய
தேனி மாவட்ட செய்திகள் ஒருசில வரிகளில்...
தூய்மை பணியாளா் பணி :-
தேனி மாவட்டத்தில் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் அரசு கல்வி விடுதியில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான தூய்மை பணியாளா் பணிக்குத் தகுதியுள்ளவா்கள் மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரசு கல்வி விடுதியில் மாதம்ரூ. 3,000 தொகுப்பூதிய அடிப்படையிலான பகுதி நேர தூய்மைப் பணியாளா் பணியிடம் (ஆண்கள் மட்டும்) இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பணிக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2022, ஜூலை 1 ஆம் தேதியன்று ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் 18 முதல் 37 வயதுக்கும், பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம், டி.என்.சி., வகுப்பினா் 18 முதல் 34 வயதுக்கும், இதர வகுப்பினா் 18 முதல் 32 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் உரிய சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம் :-
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைக் காட்டிலும் முன்கூட்டியே மே 27ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரோட்டோரம், அலுவலகம், பள்ளி வளாகங்கள், வனத்துறை இடம் ஆகியவற்றில் ஆபத்தாக உள்ள மரங்கள், கிளைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.சுகாதாரதுறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளையும், மழை காலங்களில் பரவும் தொற்று நோய்தடுப்பிற்கு தேவையான மருந்து இருப்பையும் உறுதி செய்யவும்,ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சுற்றுலா பகுதிகளில் ஆபத்தை உணர்த்தும் வகையில் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முன்னெச்சரிக்கை போர்டுகளை வைக்க வேண்டும். மீட்பு பணிகளுக்கு தேவையான வாகனங்கள், இயந்திரங்கள் செயல்பாடுகளை துறை அதிகாரிகள் உறுதி செய்ய உத்தரவிட்டு, மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
மாரடைப்பில் காவலர் பலி :-
தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் 32 வயதாகும் கணேஷ் பாண்டியன். இவர் கடந்த 7 ஆண்டுகளாக சுருளியாறு வனப்பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றி வந்தார்.நேற்று அதிகாலை குள்ளப்பகவுண்டன்பட்டி- சுருளியாறு மின்நிலைய ரோட்டிலுள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விழிப்புணர்வு வாகனம் :-
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் போட்டோ கண்காட்சி வாகனத்தை தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் துவங்கி வைத்தார்.
வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கண்காட்சி வாகனம் தேனி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனம் வ.உ.சி.யின் வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல உள்ளது. நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, கம்மவார் கலை அறிவியல் கல்லுாரிக்கு சென்ற புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
கொலை சம்பவம் :-
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீத்தாராம்தாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் வெளியூரில் வேலை செய்து வருகிறார். ஆண் பிள்ளைகள் இருவர் வசந்தகுமார் (18) மற்றும் 16 வயது சிறுவன், ஆண்டிபட்டியில் அவர்களுடைய பாட்டி பழனியம்மாளுடன் வசித்து வந்தனர்.
அண்ணன் வசந்த குமார் பால் கறக்கும் வேலை செய்து வந்தார். தம்பி கிடைக்கும் சிறு வேலைகளை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அண்ணன் வசந்தக்குமார் அவரது பாட்டியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அண்ணன்-தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த 16 வயது மைனர் தம்பி, நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அண்ணன் வசந்தகுமார் தலையில் அம்மி கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.
மேலும், அரிவாள்மனையால் அண்ணனின் கால் மற்றும் கைகளில் அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த 16 வயதுடைய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18ம் கால்வாய் :-
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18ம் கால்வாய் பாலம் இடிந்ததில் தற்போது வரை சீரமைக்கபடாமல் உள்ளது.
முல்லைப் பெரியாறு பாசனத்தை பயன்படுத்தி 17 கால்வாய்கள் கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடிக்கு பயன்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் பாசன வசதி பெற பதினெட்டாம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் லோயர் கேம்ப் முதல் போடிநாயக்கனூர் வரை செய்கிறது. இந்த கால்வாய் லோயர் கேம்பில் இருந்து போடிநாயக்கனூர் பகுதி வரை செல்வதால் இடையில் உள்ள பல்வேறு குளம் குட்டைகள் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பதினெட்டாம் கால்வாய் பாலம் உடைந்து. தற்போது வரை இந்த பாலம் சீரமைக்கப்படாமலேயே உள்ளது. விரைவில் இப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நீர்மட்டம் உயர்வு :-
தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லைக்கொடி தாண்டிக்குடி , பெரியாறு அணை,மற்றும் சிவகிரி மலைத்தொடர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இன்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் 21 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் இன்றய காலை நிலவரப்படி 130. 40 கன அடியாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 4,791 மில்லியன் கன அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 235 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .
கடந்த ஒரு சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த சில நாட்களில் அணைக்கு வரும் நீர்வரத்து 500 கன அடிக்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.