முகப்பு /செய்தி /தேனி / பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மோதல்: காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு

பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மோதல்: காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு

தாக்குதல் நடத்தப்பட்ட பெரியகுளம் காவல்நிலையம்

தாக்குதல் நடத்தப்பட்ட பெரியகுளம் காவல்நிலையம்

Periyakulam Police Station Attack | அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு பெரியகுளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட அதிரடி போலீசார் குவிப்பு

  • Last Updated :
  • Periyakulam, India

பெரியகுளத்தில்  அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட பிரச்னையில் காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேற்று காலையில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், அமைப்பினர் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக  பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளைஞர்களும், டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் இன்றிரவு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஊர்வலமாக சென்றனர்.

ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் அம்பேத்கர் சிலை அருகே இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் சேர்கள் அவர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டது. மேலும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரையும் அவர்கள் விரட்டியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணைக்காக அருகே உள்ள பெரியகுளம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காவல் நிலையத்தின் மீது கல் வீசி தாக்கினர். அதோடு காவல் நிலையம் முன்பாக இருந்த 108 ஆம்புலன்ஸ், காவல் ஆய்வாளரின் வாகனம், இரு சக்கர வாகனங்களையும் கல் வீசி தாக்கி சேதப்படுத்தினர். அதனை கட்டுப்படுத்த முயன்ற பெரியகுளம் காவலர்கள் சிலர் மீதும் கல் வீசி தாக்கப்பட்டதில் அவர்கள் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் 20க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட காவல் நிலையத்தை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு பெரியகுளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.‌ அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    First published:

    Tags: Crime News, Theni