பெண்களை அதிகமாக பாதிக்கும் எலும்பு மெலிவு நோய் (osteoporosis) குறித்து பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வது அவசியம் என தேனி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவர் சிராஜுதீன் தலைமையில் BMD எனப்படும் Bone Mineral Density பரிசோதனை முகாம் என்ற எலும்பு அடர்த்தி பரிசோதனை நடைபெற்றது. முகாமில் எலும்புகளின் அடர்த்தியை பரிசோதித்து எலும்புகளின் நிலை குறித்து கண்டறியப்படும். இதில் 40 வயதை கடந்த பெண்கள் மற்றும் முதியவர்களும் கலந்துகொண்டனர். இந்த பரிசோதனையை வெளி மருத்துவமனைகளில் செய்தால் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செலவாகும். ஆனால் காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவில் இலவசமாக செய்யப்பட்டது.
எப்படி கண்டறியலாம் :
இந்த பரிசோதனையின் மூலம் எலும்புகளின் வலிமை, அதன் தாங்கும் திறன், தேய்மானத்தின் அளவு போன்றவற்றை கண்டறியலாம். இதனை தெரிந்து கொள்வதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சித்த மருந்துகள், உணவு முறைகள், பயிற்சி முறைகள், போன்றவற்றை பின்பற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பரிசோதனை முக்கியமாக ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிவு நோயை கண்டறிய உதவும்.
இந்த முகாமில் எலும்பு வலு இல்லாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக முதுகெலும்பு வலி,முழங்கால் வலி உள்ள நபர்கள், தன்னிச்சையாக அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள், குழந்தைப்பேறு நீண்ட நாட்களாக இல்லாத பெண்கள், வயதான ஆண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கம்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலானோர் இலவச எலும்பு பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு எலும்பின் தன்மை குறித்த பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை பெற்றுச் சென்றனர்.
எலும்பு மெலிவு நோய் :
இந்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் மற்றும் எலும்பு அடர்த்தி இல்லாமல் பாதிக்கப்படும் நபர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவ அறிவுரைகள் குறித்து சித்த மருத்துவர் சிராஜுதீன் கூறுகையில், “40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மெனோபாஸ் என்ற மாதாந்திர சூதகம் நின்றவர்கள், கருப்பை அகற்றல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், குடும்பத்தில் எலும்புகள் தன்னிச்சையாக உடையும் தன்மையுடையவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மூட்டுவலியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.
டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை :
இந்த டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலமாக எலும்புகளின் அடர்த்தி T-Score என்று முடிவுகளில் கூறப்படும். இந்த டி -ஸ்கோர் ஆனது 0 என்றால் நார்மல் என்பது பொருள். அதாவது 25 வயது இளைஞர்களைப் போல எலும்பு வலுவாக உள்ளது என்பது பொருள். -1 மைனஸ் ஒன்று முதல் -2.5 என்றால் ஆஸ்டியோபீனியா என்ற எலும்பு தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்பது பொருள். -2.5 ஐ விட குறைவாக இருந்தால் எலும்பு மெலிவு நோய் உள்ளது என பொருள்.
இந்நிலையில், எலும்புகள் தன்னாலேயே உடையும் தன்மைக்கு வந்து விடும். உட்கார்ந்து எழுந்தால் கூட எலும்புகள் உடையும் அபாயம் உள்ளது. இந்த பரிசோதனையில் எலும்புகளில் எவ்வளவு கால்சியம் மற்றும் தாது உப்புகள் அடர்த்தி உள்ளது என கண்டறியப்படும். இம்முகாமில் எலும்பு மெலிவு நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அமுக்கரா சூரணம், சங்கு மாத்திரைகள், முத்துச்சிப்பி மாத்திரைகள், குங்கிலிய மாத்திரைகள், பிரண்டை மாத்திரைகள் போன்றவை பெட்டகங்களாக வழங்கப்படும்.
இந்த பரிசோதனை முக்கியமாக ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயை கண்டறிவதற்காக செய்யப்படுகிறது. இது தனியார் பரிசோதனை மையங்களில் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. கம்பம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இலவசமாக எலும்பு பரிசோதனை முகாமை நடத்தியுள்ளோம்.
நோயின் அறிகுறிகள் :
இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக இருப்பது காரணமில்லாமல் அல்லது சிறிய உடற் செயல்பாடுகளால் கூட எலும்புகள் உடைவது ஆகும். முக்கியமாக இந்நோயில் பாதிக்கப்படும் எலும்புகள் முதுகு தண்டுவடம் , மார்பு எலும்புகள், இடுப்பு எலும்பு, கை மணிக்கட்டு போன்றவை ஆகும். இந்நோயானது ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏனெனில் பெண்கள் 50 வயதை கடக்கும் போது மாதாந்திர பூப்பு சுழற்சி நின்று விடுவதால் எஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைய ஆரம்பிப்பதால் அது எலும்பில் கால்சியம் சத்து சேர்வதைக் குறைத்து விடுகிறது.
இதனாலேயே எலும்புகள் பலவீனமடைகின்றன. வயதான ஆண்களுக்கும் டெஸ்டோஸ்டீரோன் என்னும் ஹார்மோன் குறைவதால் எலும்புகளும் தசைகளும் வலு குறைந்து பலவீனம் அடைகின்றன. இதனாலேயே வயதான காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூன் விழுதல் ஏற்பட்டு உடல் வளைந்து விடுகின்றது. பெண்களுக்கு தைராய்டு குறை சுரப்பு நோயும் எலும்புகளின் அடர்த்தி குறைய காரணமாகிறது.
ஆண்களுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை பொருட்களை உட்கொள்ளல், மென் பானங்கள் அருந்துதல் போன்ற காரணங்களால் எலும்ப அடர்த்தி குறைகின்றது.
உடற்பயிற்சி இன்மையும் முக்கிய காரணமாகும்.
செய்ய வேண்டிய வழிமுறைகள் :
சித்த மருத்துவ உணவியலில் இந்நோயை தடுக்க உளுந்து , வெந்தயம், பால், பால் பொருட்கள் , கீரைகள் முக்கியமாக பிரண்டை என்னும் மூலிகை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரண்டையில் உள்ள இயற்கை ஸ்டீராய்டுகள் எலும்பில் எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை சேரச் செய்கிறது. மேலும் உடைந்த எலும்புகளை சேரச்செய்யும் ஆஸ்டியோபிளாஸ்ட் உருவாக்கத்தில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இதேபோல உடைந்த எலும்புகள் சேரச் செய்வதில் ஆஸ்டியோபோன்டின் உருவாக்கத்திற்கும் பிரண்டை உதவி புரிகிறது. பிரண்டை மூட்டுகளில் வலியை உருவாக்கும் ஹீம் ஆக்ஸிஜனேஸ் என்னும் வேதிப்பொருளின் உருவாக்கத்தை தடை செய்வதால் வலியைக் குறைக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நடைப்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள், மது புகையிலை தவிர்த்தல் கால்சியம் தேவையான அளவு எடுத்துக் கொள்ளல் தினம் 1கிராம் அளவு விட்டமின் டி சத்து உணவுகள் மற்றும் வெயிலில் காய்தல்
சரிவிகித உணவு தேவையற்ற மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தல் போன்றவை ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகள் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bone health, Health, Local News, Theni