12 மாதத்தில் ஒற்றை கை, ஒற்றைக் காலுடன் பிறந்த குழந்தையை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் வளர்த்து உலகமே வியக்கும் அளவிற்கு நடனமாட வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியும், பல்வேறு விருதுகளையும் பெற வைத்து 6ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வளர்ச்சிக்கு உதவிய தாய் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 6ம் வகுப்பு படிக்கும் செண்பகமூர்த்தி என்ற மாணவி ஒற்றை கை, ஒற்றைக் காலுடன் ஆடும் நடனம் பலரது பாராட்டைப் பெற்றதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். தேனி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாணவி வருகை புரிந்து தனது நடன திறமையை வெளிக்காட்டி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை வெளிக்காட்டி பாராட்டை பெற்றார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நகரில் இயங்கி வரும் தேனீக்கள் அறக்கட்டளை சார்பாக தேனீக்கள் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமல்ல அது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒற்றை கை, ஒற்றைக் காலுடன் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆடிய நடனம் பலரையும் வியக்க வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் - சத்யா தம்பதியினருக்கு பிறந்தவர் செண்பகமூர்த்தி. இவர் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள NSSB கார்ப்பரேஷன் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். சண்முகம் - சத்யா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் பிள்ளை 11 ம் வகுப்பும், இரண்டாவது பெண் பிள்ளை 6ம் வகுப்பும், மூன்றாவது ஆண்பிள்ளை நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பிறந்த 2வது குழந்தையான செண்பகமூர்த்தி பிறக்கும்போது ஒரு கை, ஒரு கால் இல்லாமல் பிறந்துள்ளார்.தனது குழந்தை பிறக்கும் பொழுது ஒரு கை, ஒரு கால் இல்லாமல் பிறப்பார் என்று தெரிந்தும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்து உள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தனது குழந்தையை பெற்றெடுத்து உலகமே வியக்கும் அளவிற்கு நடனமாட வைத்துள்ளார் தன்னம்பிக்கை தாய் சத்யா.
பத்து மாதம் கடந்து இரண்டு மாதங்கள் மருத்துவமனையிலிருந்தவாறு 12 மாதங்களில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் சத்யா. ஒரு கை, ஒரு கால் இல்லாமல் குழந்தைகள் உட்கார கூட முடியாது என்ற விமர்சனத்தை தவிடு பொடியாக்கி இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குழந்தையைப்பார்த்து பாராட்டும் அளவிற்கு வளர்த்துள்ளார்.
சமுதாயத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு மத்தியில் தனது குழந்தை வித்தியாசமாக இருப்பதால் செண்பகமூர்த்தி தாழ்வு மனப்பான்மையுடன் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, தொடர்ந்து ஊக்கம் அளித்து பெருத்த அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார் சத்யா. குழந்தைக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருப்பதை அறிந்து குழந்தை நடனம் ஆடுவதற்கு உதவி செய்தும் உள்ளார்.
அதன்படி தனது நாலு வயதில் இருந்தே திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளைக் கற்றுக் கொண்டு நடனமாடத் தொடங்கியுள்ளார் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான செண்பகமூர்த்தி. தொடர்ந்து பல்வேறு பள்ளி நிகழ்ச்சிகளிலும் வெளி நிகழ்சிகளிலும்பங்கு பெற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். குறிப்பாக தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்று மாநில அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்று உள்ளார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி அனைவரது கவனத்தையும் பெற்று உள்ளார் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி செண்பக மூர்த்தி.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து செண்பக மூர்த்தி கூறுகையில், “எனக்கு முழு தன்னம்பிக்கை அளித்தது எனது அம்மா தான். நடனத் திறமையை வெளிக்காட்டுவதற்கு எங்குஅழைத்தாலும் எனது அம்மா அங்கு என அழைத்துச் செல்வார். எனது அம்மா எப்போதும் என்னிடம் கூறுவது உண்டு நீ எல்லாரையும் போல சாதாரண பெண் அல்ல.நீ மற்றவர்களை போல் இல்லாமல் கடவுளின் நம்பிக்கை குழந்தை. உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லைஎன அடிக்கடி கூறுவார். அம்மாவின் நம்பிக்கை வார்த்தை எனக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும். அம்மா இல்லை என்றால் நான் இல்லை” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni