கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காயத்துடன் மர்மமான முறையில் மரணம் -- பாலியல் பலாத்காரம் செய்து கொலையா என காவல்துறையினர் விசாரணை
தேனி மாவட்டம் கூடலூர் பொம்ஜி அம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு நியாயவிலைக் கடை அருகே தலையில் பலத்த காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம மரணம் :-
கூடலூரில் தனியார் திரையரங்கம் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் நேற்று வழக்கம்போல பொதுமக்கள் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அப்போது நியாய விலை கடை அருகே பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து பொதுமக்கள் கூடலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர் ஆக அதே பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித் திரிந்தவர் என்றும், 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மயில் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இறந்து கிடந்த பெண்ணின் தலை, உடல் போன்றவற்றில் காயங்கள் இருந்ததால் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து தொடர் விசாரணையில் மர்ம நபர்கள் அப்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பெண் இறந்து கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து, அங்கிருந்து அருகே உள்ள நகராட்சி ஆண்கள் கழிப்பறை வளாகம் மற்றும் அருகே உள்ள திரையரங்கத்தின் பின்புறம் வரை சென்று மோப்பமிட்டு திரும்பியது . தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஸ் டேங்ரே சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டர் . மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அருகே உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் இறந்த பெண்ணின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
50 வயது மதிக்கத்தக்க பெண் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.