Home /theni /

தேனியில் தொடர் மழை.. முல்லை பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..

தேனியில் தொடர் மழை.. முல்லை பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..

தேனி - முல்லைப்பெரியாறு

தேனி - முல்லைப்பெரியாறு

Theni Mullaiperiyar : இடுக்கி மற்றும் முல்லைப் பெரியாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும், தேனி மாவட்டத்தில் மேகமலை மற்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் முல்லைப் பெரியாறில் சுமார் 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..

மேலும் படிக்கவும் ...
 

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை புதுச்சேரி, தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது . கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.


கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


குறிப்பாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் முல்லை பெரியாறு அணை பகுதிகளில் தொடர் மழைப் பொழிவு உள்ளதால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தினசரி மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.


ஜூலை மூன்றாம் தேதி வரை முல்லை பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததன் தொடர்ச்சியாக நேற்று முதல் 1600 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 127.70 கன அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1457 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1678 கன அடியாகவும் உள்ளது.


மேலும் மேகமலை பகுதியிலும் 2 தினங்களாக மழை பெய்து வருவதால், மேகமலை அணைகளில் இருந்து வெளியேற்றும் தண்ணீர், தூவானம் வழியாக சுருளி அருவிக்கு வந்தடைந்து சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது .


சுருளி அருவியிலிருந்து வெளியேறும் தண்ணீரும், காட்டுவாரி தண்ணீரும் சேர்ந்து முல்லைப் பெரியாற்றில் 2 ஆயிரம் கனஅடி வரை செல்கிறது. இதனால் முல்லைப் பெரியாற்று பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


தொடர்ந்து தேனி மாவட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் மழை பெய்யும் என்பதால் முல்லைப் பெரியாற்று பகுதிகளில் கூடுதலாக வெள்ளநீர் ஓடும் எனவும் கூறப்படுகிறது.


இதனால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைப் பெரியாற்று பகுதிகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவும் குளிக்கவும் வேண்டாமென தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.


இன்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாற்றுப் பகுதிகளில் வெள்ளநீர் அதிகரிக்கும் அபாயம் உள்ளது
Published by:Arun
First published:

Tags: Heavy rain, Local News, Theni

அடுத்த செய்தி