Home /theni /

லோயர் கேம்ப் - மதுரை கூட்டு குடிநீர் திட்டம்.. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே பூமிபூஜை!

லோயர் கேம்ப் - மதுரை கூட்டு குடிநீர் திட்டம்.. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே பூமிபூஜை!

Madurai

Madurai water project 

Theni District: தேனி மாவட்டம் 1296 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தொடங்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.

    லோயர் கேம்ப் - மதுரை கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  1,020 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார்.

    அதன் தொடர்ச்சியாக ரூபாய் 1,020 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்டம் காலதாமதத்தால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூபாய் 1, 296 கோடியாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடர்பாக தேனி மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வந்த நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து அப்போது தொடர் போராட்டங்களை இப்பகுதி விவசாயிகள் செய்து வந்தனர். ஆனாலும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அரசு அதிகாரிகள் இத்திட்டத்திற்கான பணிகளை ரகசியமாக ஆய்வு செய்து சென்றனர்.

    தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு குழாய் மூலமாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு வைகை அணையை தூர் வாரி மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை கட்டி குழாய் மூலம் மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் எடுத்துச் சென்றால் தேனி மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் பல்வேறு போராட்டம் சாலை மறியல் உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்களை இப்பகுதி விவசாயிகள் செய்து வந்தனர்.

    பூமி பூஜை :-

    விவசாயிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தின் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    லோயர் கேம்ப் அருகே உள்ள முல்லைப் பெரியாற்றங்கரை வண்ணான் துறையில் மதுரை கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் பெரியாறு வைகை பாசன மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் அரசு, மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, பெரியாறு வைகை பாசன உத்தமபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பூமி பூஜை நடைபெற்ற வண்ணான்துறை பகுதியில் கூடலூர் பகுதியை சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் சலவை செய்து வருவதால், சலவைத் தொழிலாளர்கள் சலவை செய்யும் இடத்திற்கு மாற்று இடம் வழங்கவும் அப்பகுதியில் பட்டா வழங்கவும் கோரிக்கை வைத்தனர். பூமி பூஜை நடைபெற்றதை கண்டித்து கூடலூர் முல்லை சாரல் விவசாய சங்கத்தைச் சேர்ந்த நபர்கள் அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட தொடங்கினர்.

    மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் வண்ணான் துறை செல்ல விடாமல், குறுவனூத்து பாலம் அருகில் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி