தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.
மண் மணம் மாறாத தேனி மாவட்டத்தில் எண்ணற்ற தனிச் சிறப்புகளையும், பெருமைகளையும் தன்னகத்துள் கொண்டிருந்தாலும் கூட கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தமிழர் வரலாற்றை பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கும் 2,000 ஆண்டுகள் பழமையான மங்கலதேவி கண்ணகி கோயில் பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
எங்கு அமைந்துள்ளது?
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்கு உட்பட்ட வண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் விண்ணேற்றிப்பாறை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,337 மீட்டர் (4,386 அடி) உயரத்தில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.
மலை மீது கோயில் கட்டியது ஏன்?
சிலம்பை திருடியதாக பாண்டிய மன்னன் தவறான தீர்ப்பு அளித்து தன் கணவன் கோவலனை கொலை செய்ததாக அரசவைக்கே சென்று அரசனின் தவறை சுட்டிக்காட்டி வீரத்திற்கும், ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டாக இருந்ததுடன், கற்புக்கும் அடையாளமாக திகழ்ந்தவர் கற்புக்கரசி கண்ணகி. தனது கணவருக்கு அநீதி இழைத்த இந்த மதுரை சாம்பலாகட்டும் என கண்ணகி விடுத்த சாபம் காரணமாகவே அன்று மதுரை நகர் தீக்கிரையானதாக தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் கூறுகிறது.
மதுரையை எரித்த பின் 14 நாட்கள் கால்நடையாகவே குமுளி பகுதிக்கு வந்து வேங்கை மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் பளியர் இன பழங்குடி மக்களின் ஆதரவுடன் சிறிது காலம் கண்ணகி வாழ்ந்து வந்ததாகவும், அந்த சமயம் விண்ணுலகில் இருந்து நிலவின் வழியே புஷ்பக விமானத்தில் வந்த அவளது கணவன் கோவலன், அவளுக்கு மீண்டும் மங்கல நாண் கட்டி, தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. இதன் காரணமாகவே இந்த இடம் விண்ணேற்றிப்பாறை என்று அழைக்கப்படுகிறது.
விண்ணேற்றிப்பாறையில் இருந்து கண்ணகி கோவலனுடன் சென்ற காட்சியைப் பார்த்த பளியர் பழங்குடி மக்கள், சேர மன்னன் செங்குட்டுவனிடம் இக்கதையைச் சொல்ல, அவன் கண்ணகியைச் சிறப்பிக்க இமய மலையிலிருந்து கல்லெடுத்து வந்து இந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் கட்டியதாக கூறப்படுகிறது.
பக்தர்களுக்கு எப்போது அனுமதி?
இருமாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோவிலை சென்றடைவதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாத நிலையில் வருடம் ஒரு முறை இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை முழுநிலவு விழாவிற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா மே 5 ஆம் தேதியன்று நடைபெற்றது.
தமிழரின் பெருமையை பறைசாற்றும் சிலப்பதிகாரத்தின் வாழும் சாட்சியாக உள்ள இந்த கோயில் தமிழக - கேரளா எல்லை பிரச்சனையால் சிதலமடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தமிழக மக்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
எப்படி செல்வது?
கண்ணகி கோயிலுக்கு தமிழக பகுதியில் இருந்து செல்வதென்றால் லோயர் கேம்ப் பளியங்குடி பகுதியில் இருந்து சுமார் 6.6 கிலோமீட்டர் நடைபயணமாக செல்வதற்கு ஒரு மலையேற்ற பாதை உள்ளது. இதேபோல் கேரள மாநிலம் குமுளியில் இருந்து கொக்கர கண்டம் வழியாக கரடு முரடான மலைப்பாதையில் 14 கிமீ தூரம் ஜீப்பில் பயணம் செய்து கோயிலை அடையலாம்.
கார் போன்ற தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இந்த வருடம் சித்திரை நிலவு விழாவுக்கு ஜீப்பில் பயணம் செய்தால் ஏற்றமும், இறக்கமும், சரிவுகளும் நிறைந்த மலைப்பாதை வழியாக போவதற்கும், வருவதற்கும் ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : Swiggy, Zomato நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் கம்பம் ரீச் நிறுவனம்..!
குறுகியதாகவும், சரிவுகள் மிகுந்த பாதையாகவும் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் ஏறக்கூடிய வகையில் அமைந்துள்ளது இந்த பளியியன்குடி மலைப்பாதை. இந்த பாதையில் செல்லும் நபர்களுக்காகவே பளியன்குடியிலிருந்து மலையேற்றம் தொடங்குவதற்கு முன்பாக அடிவாரப் பகுதியில் அன்னதானமும், மருத்துவ உதவிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
காட்டுக்குள் செல்வதற்கு முன் எச்சரிக்கை
காடுகளில் தீப்பற்றக்கூடிய வகையிலான பொருட்கள், பிளாஸ்டிக், போதைப் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது அடிப்படை விதி. வனத்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி தான் மலையேற்றம் செய்ய முடியும்.
நடந்து சென்றாலும் சரி, ஜீப்பில் சென்றாலும் சரி மனிதர்களால் மாசுபடாத மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியின் அழகையும், தூய்மையையும் ரசித்தவாறே செல்லலாம். வருஷத்துக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சிதிலமடைந்துள்ள கோயில்
தமிழக - கேரளா எல்லை பிரச்சினையால் ஆண்டிற்கு ஒருமுறை செல்லக்கூடிய வகையில் மங்களதேவி கண்ணகி கோயில் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில், புலிகள் சரணாலய பகுதிக்குள் வருவதாலும் , கேரளா அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதாலும் கோயிலை புனரமைப்பதற்கான வேலைகள் தற்போது வரை நடைபெறவில்லை.
காணாமல்போன கண்ணகி சிலை
கோயிலின் சுவர்கள் முற்றிலும் உடைந்தும் வளாகம் முழுவதும் புனரமைக்கப்படாமலும் காட்சியளிக்கப்படுகிறது. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன நிலையில் சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் மட்டும் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கண்ணகியை தரிசனம் செய்கின்றனர். கண்ணகி அறக்கட்டளையினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்படுகிறது. கடும் உடல் சோர்வுக்கு பின்னால் கோயிலை வந்தடைந்த பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு அமிர்தம் போலவே ருசிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இருமாநில எல்லை பிரச்சனை
இருமாநில எல்லை பிரச்சனையால் கண்ணகி கோயில் தொடர்ந்து பராமரிக்கப்படாமல் போனால் கோயிலும் கோயிலின் வரலாறு முற்றிலும் அழிந்து போகும் என வரலாற்று ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகின்றனர். மாநில அரசுகளும் கண்ணகி கோயிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni