தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானையை சின்ன ஓவுலாபுரம் மலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். கம்பம் பகுதிக்குள் யானை எவ்வாறு வந்தது? என்னென்ன செய்தது? எவ்வாறு பிடிக்கப்பட்டது? என்பது பற்றிய முழு விவரங்களை தற்போது காணலாம்.
அரிசிக்கொம்பன் யானை
கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் யானை கடந்த ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர் கேரள வனத்துறையினர்.
அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் என்னும் யானை கிட்டதட்ட 35 வயது மிக்க ஆண் யானை. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட சாந்தாம்பாறை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்து வந்த இந்த யானையானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் அரிசிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு 29.04.2023 அன்று கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு 30.04.2023 அன்று அதிகாலை 5 மணியளவில் கேரள மாநிலம், பெரியார் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முல்லாக்குடி எனும் முல்லைக் கொடி பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தை கேரள வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியான தேனி மாவட்டம், மேலக்கூடலூர் கிராமப்பகுதிக்கு 30.04.2023 அன்று வந்தது. இந்த ஒற்றை காட்டுபாளையானது கடந்த 01.05.2023 அன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பகம், மேகமலை கோட்டம், கூடலூர் வனச்சரகத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது.
அங்கிருந்து அடுத்தடுத்த நாட்களில் தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்தது.
இதையும் படிங்க : பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி..! புதிய அப்டேட் வெளியீடு..!
மேகமலையில் அரிசிக்கொம்பன்
07.05.2023 அன்று அரிசிக்கொம்பன் சின்னமனூரிலிருந்து மேகமலை ஹைவேவிஸ் செல்லும் சாலையில் 10வது வளையில் காணப்பட்டது. இதனால் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினரால் யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
தமிழக பகுதிக்குள் யானை நுழைந்த உடனே கேரள வனத்துறையிடமிருந்து அரிசிக்கொம்பன் யானை நடமாடிய பகுதிகளை புவியிடங்காட்டியின் (GPS) மூலம் பெறப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. 06.05.2023 முதல் மேகமலை பகுதிக்கு செல்வதற்கு நுழைவாயிலாக உள்ள வனத்துறையின் தென்பழனி சோதனைச்சாவடி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.
மேகமலை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 20 காவலர்கள் தென்பழனி சோதனைசாவடி பகுதியிலும், 20 காவலர்கள் மேகமலை ஹைவேவிஸ் பகுதியிலும் மாவட்ட காவல் கன்காணிப்பாளர் மூலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரிசி கொம்பன் யானையின் கழுத்து பகுதியில் உள்ள Receiver கருவியில் செயற்கைக்கோள் மூலமாக கிடைக்கும் சமிக்ஞைகளை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு துணை இயக்குநர் மூலமாக பெற்று கண்காணிப்பட்டது.
மேலும், யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு WWP என்ற அமைப்பின் மூலமாக ஒரு VHF Receiver பெறப்பட்டது. யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடலூர், கம்பம் (கிழக்கு) மற்றும் சின்னமனூர் வனச்சரக அலுவலர்கள் தலைமையில் மூன்று தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டத்தை இரவு பகலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
பேருந்து பயணிகள் அச்சம்
யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தாலும் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாறு, மணலாறு, ஹைவேவிஸ் உள்ளிட்ட இடங்களுக்கு அரசிக்கொம்பன் யானை உலவி வந்ததோடு, பயணிகள் செல்லக்கூடிய அரசு பேருந்தை வழி மறைத்து பயணிகளை அச்சுறுத்தியது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் சென்று யானை அட்டகாசம் செய்து வந்தது.
இதனால் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராம மக்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளூர் பொதுமக்களும் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
கம்பத்தில் அரிசிக்கொம்பன்
26.05.2023 அன்று தேனி மாவட்டம், குமுளி சுரங்கணாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு விளை நில பகுதியில் யானை தென்பட்டது. இதனிடையே 24 மணி நேரமும் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்த அரிசிக்கொம்பன் யானை இடம்பெயர்ந்து குமுளி ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு வந்தது. பின் கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்தது.
பின்னர் அதிகாலை வேளையில் அங்கிருந்து இடம் பெயர்ந்த அரிசிக்கொம்பன் என்னும் ஒற்றை காட்டுயானை (27.05.2023) அதிகாலை 05.00 மணியளவில் கம்பம் ஹார்வெஸ்ட் பிரஷ் பார்ம் ஸ்டே ரிசார்டில் அருகில் இருந்து பின்னர் கம்பம் நகரத்திற்குள் நுழைந்தது. கம்பம் நகரில் முதல்முறையாக காட்டு யானையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து நாலா பக்கமும் சிதறி ஓடினர். ஒரு சில இளைஞர்கள் யானையின் பின்னாலே சென்று யானைக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர்.
கம்பம் நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த யானை, பொதுமக்களின் கூச்சலுக்கு பயந்து வனத்துறையினரின் வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது. மேலும், யானையினை பார்ப்பதற்காக அந்த வழியில் சென்ற கம்பம், ஆசாரியார் தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவரை யானை தாக்கியதில் காயம் ஏற்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
யானைத்தாக்கி சேதம் அடைந்த ஆட்டோவின் உரிமையாளருக்கு 20000 ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பால்ராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இளைஞர் கைது
யானையை படம் பிடிப்பதற்காக சில இளைஞர்கள் யானை தஞ்சம் அடைந்துள்ள தோட்டப்பகுதிக்குள் ட்ரோன் கேமராவை பறக்க விட்டபோது அதை பார்த்து தேனீக்கள் என்று பயந்த அரிக்கொம்பன் அப்பகுதியை விட்டு வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் மீண்டும் அரிசிக்கொம்பனை பின்தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கு உத்தரவு
கம்பம் நகருக்குள் யானை புகுந்த உடனே அரிசிக்கொம்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்திட தேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் யானையினை பிடிக்க 3 கும்கி யானைகளும் கொண்டு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அரிசி கொம்பன் யானையை பிடித்து வேறு இடத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்த மாவட்ட நிர்வாகம் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க ஏதுவாக, அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறையினரால் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் அரிசி கொம்பன் யானையானது பொதுமக்களை தாக்காமல் இருக்க கம்பம் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டது.
சுருளிப்பட்டி அருகே அரிக்கொம்பன்
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூத்தநாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள தனியார்க்கு சொந்தமான வாழை தோப்பில் யானை தஞ்சம் அடைந்தது. இதனால் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். 28.05.2023 அன்று அதிகாலை யானை கம்பத்திலிருந்து இடம் பெயர்ந்து சுருளிப்பட்டி அருகே உள்ள யானைகஜம் பகுதிக்கு சென்றது. அந்த பகுதியில் ஒரு சில விளைநிலங்களை அரிசிக்கொம்பன் யானை சேதப்படுத்தியது.
சுருளிப்பட்டி கிராம பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கும் அந்த அரிசிக்கொம்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சிறப்பு நிபுணர் வரவழைக்கப்பட்டார். அதிகாலை கோவை மாவட்டம் ஆனைமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானையையும் கம்பம் நகர் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
மேலும் அரிசி ராஜா, சுயம்பு மற்றும் உதயன் என்ற 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு கம்பம் புறவழிச்சாலை தனியார் மண்டபத்திற்கு அருகே உள்ள புளியந்தோப்பில் யானைகளை வனத்துறையினர் வைத்தனர். கும்கி யானைகளை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூடியதால் கும்கி யானைகள் கம்பம் வனச்சரக அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற யானை அந்த பகுதியிலே சுற்றி திரிந்தது. தேனி மாவட்டத்தில் இருந்து 160 வனத்துறை அதிகாரிகளும் கோயம்பத்தூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 31 வனத்துறை அதிகாரிகளும் அரிசிக்கொம்பனை பிடிக்கும் முயற்சியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இவர்களுடன் பயிற்சி பெற்ற பழங்குடியினர் ஆகியோர் அரிகொம்பனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினருக்கு உதவி புரிய வருகை புரிந்தனர்.
அமைச்சர் வருகை
28.05.23 அன்று யானையை பிடிக்க வனத்துறையினர் மேற்கொள்ள நடவடிக்கைகளை கண்காணிக்கவும், யானையால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்கவும், அரிக்கொம்பன் யானையை பத்திரமாக பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்யவும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வருகை புரிந்தார்.
கம்பம் சுருளிப்பட்டியில் அரிசிக்கொம்பன் யானை சென்ற இடத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தேனி மாவட்ட ஆட்சியர், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஒருவர் பலி
30.05.23 அன்று தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கினார்.
இதையும் படிங்க : அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டது... மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்...!
கும்கி யானைகள் காத்திருப்பு
02.06.2023 அன்று சண்முகாநதி நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள எரசக்கநாயக்கனூர் காப்புவனப்பகுதிக்குள் யானை இருந்தது. அரிசி கொம்பன் யானை காட்டுப்பகுதிக்குள் இருந்ததால் அதனை பிடிப்பதற்கு ஏதுவான சூழல் ஏற்படும் வரை கும்கி யானைகள் கம்பம் பகுதியிலேயே இருக்க முடிவு செய்யப்பட்டது.
பின் அரிசிக்கொம்பன் யானை காமய கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதியிலேயே நிலை கொண்டது. இந்த யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 5 நாள்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர்.
தயாரான வனத்துறையினர்
04.06.23 அன்று இரவு அரிசி கொம்பன் யானை சின்ன ஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மலைப்பகுதியில் உலாவியது. யானையை பிடிப்பதற்கான சூழல் உருவாகும் வரை காத்திருந்த வனத்துறையினருக்கு தக்க சந்தர்ப்பம் கிடைத்தது. யானையைப் பிடிப்பதற்காக காத்திருந்த வனத்துறையினர் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர்.
அரிசிக்கொம்பன் யானை சின்ன ஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மலைப்பகுதியில் உலாவியதால், யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏதுவான இடமாக இருப்பதால் அதன் முன்னேற்பாடாக கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் சின்ன ஓவுலாபுரம் பெருமாள் கோவில்
வனப்பகுதி நள்ளிரவே கொண்டு சென்றனர். மேலும் பொக்லைன் இயந்திரத்தை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
மின்சாரம் துண்டிப்பு
O5.06.23 அன்று அதிகாலை கும்கி யானைகள் லாரிகளில் கொண்டு செல்வதையடுத்து கம்பம், காமய கவுண்டன்பட்டி, ராயப்பன் புரட்டி பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யானைக்கு நான்கு முறை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் அரிசிக்கொம்பன் யானை ஏற்றப்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு பிடிக்கப்பட்ட யானையை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு யானை வேறு இடத்திற்கு வாகனங்களின் அணிவகுப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
தற்போது யானை எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றிய விவரம் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படவில்லை . இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என வனத்துறை என கூறியுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஊரடங்கு தளர்த்தப்பட்டது
கம்பம் பகுதிக்குள் வந்து பொதுமக்களை விரட்டியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் வெளியே வருவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தோட்ட வேலைகளுக்கு விவசாயிகள் செல்வதை வனத்துறையினர் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni