Home /theni /

Theni : பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் அமுக்கரா சூரணம் பற்றி தெரியுமா?

Theni : பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் அமுக்கரா சூரணம் பற்றி தெரியுமா?

அமுக்கரா

அமுக்கரா சூரணம்..

Health Benefits of Ashwagandha (Amukra) : சித்த மருத்துவத்தில் சித்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அதிகம் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான அமுக்ரா சூர்ணம் பற்றி சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறும் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மேலும் படிக்கவும் ...
    சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சித்த மருத்துவம் உருவானது எனலாம். இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களை கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியன  கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். ஆங்கில மருத்துவத்தை பின்பற்றுவது போல தற்போது பெரும்பாலானோர் சித்த மருத்துவத்தையும் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

    உடல் சம்பந்தப்பட்ட பெருவாரியான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற முடியும் என்பதால் பெரும்பாலானோர் கவனம் சித்த மருத்துவத்தின் மீது திரும்பியுள்ளது. சித்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அதிகம் பரிந்துரைக்கும் மருந்தான அமுக்கரா சூரணம் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பயணளிக்கக் கூடியது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

    உலகையே அச்சுறுத்திக் கொண்டு வந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போதும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகமும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் உணவு வகைகளையும், பாரம்பரிய மருந்துகளையும் பரிந்துரைத்துள்ளது. அங்ஙனம் குறிப்பிடப்படும் சித்த மருந்துகளில் \"அமுக்கரா சூரண மாத்திரையும்\" அடங்கும். இதனை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு வழங்கும் முறை பயன்பாட்டில் உள்ளது.

    அமுக்கரா :-

    அமுக்கரா சூரண மாத்திரையானது 7 வகை மூலிகை பொருட்களாலான ஒரு கூட்டு மருந்தாகும். அமுக்கரா, மிளகு, கிராம்பு, சிறுநாகம்பூ, சுக்கு, ஏலக்காய், திப்பிலி ஆகியவை கொண்டு இந்த மருந்தானது தயாரிக்கப்படுகிறது

    இம்மருந்து வயிற்றுப்புண், இரத்தசோகை, ஈரல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் மறதி போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    சித்த மருத்துவத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம், உடல் வன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் காயகற்பமாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அமுக்கரா சூரண மாத்திரை சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களினால் ஏற்படும் உடல் வன்மைக் குறைவை சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக நவீன மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இந்த அமுக்கரா சூரண மாத்திரையை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலில் தினசரி இரு வேளை எடுத்துக் கொள்ளலாம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊற இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்களும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் , இந்த மாத்திரை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருவதால் தொடர்ந்து இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் , நீரிழிவு , ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வோரும் இந்த சூரணத்தை எடுத்து கொள்ளலாம் என சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறுகிறார்.

    மேலும் பொது மக்கள் அனைவரும் இந்த அமுக்கரா சூரண மாத்திரையை மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தி தங்கள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து கொரோனா மற்றும் இதர தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Health Benefits, Theni

    அடுத்த செய்தி