Home /theni /

கூடலூர் : 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த கோயிலின் பரிதாப நிலை!

கூடலூர் : 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த கோயிலின் பரிதாப நிலை!

Gudalur

Gudalur temple 

போரின்போது தம்பிரான் குடும்பத்தினர்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற பிறகு இந்த கோவிலையும், நிலத்தையும் அங்கு பூஜை செய்த சுவாமியின் குடும்பத்தினரே பரம்பரயாக கவனித்து வந்துள்ளனர்

    கூடலூர் : 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த கோயிலின் பரிதாப நிலை!

    தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பழமை வாய்ந்த கோயில் :-

    தேனி மாவட்டம் கூடலூரில் அரசு விதைப்பண்ணைக்கு செல்லும் வழியில் தாமரைக்குளம் பகுதியில் 17ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி முழுவதும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலை தமிழக பகுதிகளான கூடலூர், கம்பம், பாளையம் மற்றும் கேரள பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பூஞ்சாறு அரசவம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் அரசன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் மன்னர்களின் ஆட்சி இருந்தபோது பூஜைகள் சிறப்பாக நடைபெற்று, மக்களும் சிறப்பாக வழிபட்டு வந்து உள்ளனர். இந்த கோயிலுக்கு எதிரே தெப்பக்குளமும், கோயிலுக்கு சொந்தமான நிலமும் உள்ளது.

    வரலாறு :-

    போரின்போது தம்பிரான் குடும்பத்தினர்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற பிறகு இந்த கோவிலையும், நிலத்தையும் அங்கு பூஜை செய்த சுவாமியின் குடும்பத்தினரே பரம்பரயாக கவனித்து வந்துள்ளனர்.

    நாள் போக்கில் இக்கோயிலை பராமரித்து வந்த சுவாமியின் குடும்பத்தினரும் வருவாய் குறைவால் கூடலூரைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். இதனால் இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதி பொதுமக்கள் வெள்ளி செவ்வாய் அன்று இக்கோயிலுக்கு பூஜை செய்து வந்தாலும், தற்போது வழிபாடு செய்ய முடியாத அளவிற்கு கோயில் சேதமடைந்துள்ளது

    இந்த கோயிலின் அருகில் குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும் ஊர் பெரியோர்களால் கூறப்படுகிறது. அவர்களின் நினைவாக இங்கு குள்ள மனிதர்களின் சிலையும் வீழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவலும் கிடைத்தது.

    மேலும் இக்கோயில் சைவர்கள் வழிபாடு செய்த அடையாளங்கள் இக்கோயிலில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பராமரிப்பு தேவை :-

    இது குறித்து ஊர் பெரியோர்கள் கூறுகையில், \" மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த சிவன் கோயில். இந்த கோயிலில் சிவன் குடி இருந்ததாக முன்னோர்களால் நம்பப்பட்டது. இதனால் இந்த பகுதியில் வாழ்ந்த குள்ள மனிதர்களும் சிவனின் அருகிலேயே வாழ்ந்து வந்ததாக எங்களின் பாட்டிமார்கள் கூறியுள்ளார்கள்.

    தற்போது இந்த கோயில் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. இந்த கோயில் , எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பெரும்பலானார் இந்த கோயிலுக்கு வருவதில்லை.

    இருந்தாலும் அவ்வப்போது சிலர், இங்கு வந்து பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வதும் உண்டு. இங்கு ஒரு பூசாரி மட்டும் வந்து விளக்கு போட்டு வருகிறார்.

    இந்த கோயில் அமைந்துள்ள இடம் மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த இடம். இந்த கோயிலில் நேரம் செலவு அளிப்பதற்கு ஏற்றவாறு இடம் உள்ளது. அரசு இந்த கோவிலை சீரமைத்து கொடுத்து, போதிய தெரு விளக்கு வசதி செய்து கொடுத்தால் மக்கள் இங்கு அதிக அளவு வர வாய்ப்பு உள்ளது.

    இக்கோயிலும் தஞ்சை கோயிலின் கட்டிடக்கலையும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பு போன்றதாக இருக்கும். கம்பம் கம்பராய பெருமாள் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலூர் ஈஸ்வரன் கோயில் ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ள சிறப்பும் இக்கோயிலுக்கு உள்ளது.

    மேலும் கோயிலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சி செய்தால் கோயில் பற்றிய முழுவிபரமும் தெரியவரும் என்கிறார் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் \" என்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி