கூடலூர் : வழிவிடும் முருகன் கோவிலுக்கு இவ்வளவு சிறப்பா? - வியக்க வைக்கும் தகவல்கள்!
தேனி மாவட்டம் தமிழக - கேரள மலைப் பாதையில் அமைந்துள்ள, வழிவிடும் முருகன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் கோவில் சிறப்புகள் பற்றி இங்கு காணலாம்.
லோயர் கேம்ப் :-
லோயர் கேம்ப் வழியான குமுளி மலைச்சாலையில் ஸ்ரீ வழிவிடும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப் பெரியாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த முருகன் கோவிலானது, மலை பகுதியில் உள்ளதாலும், சிறிய அளவிலான அருவியும் உள்ளதாலும் பக்தர்களுக்கு விருப்பமான கோவிலாகும்.
சிறப்பு பூஜை :-
லோயர்கேம்ப்பில் உள்ள ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு தை மற்றும் பங்குனி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பதை காண முடியும். சிறப்பு நாட்களில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு, இளநீர், பன்னீர், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட சகல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுவதை கான கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவது கூடுதல் சிறப்பாகும்.மேலும் சுவாமிக்கு கிரீடம், மலர் மாலை அணிவிக்கப்பட்டு ராஜஅலங்காரத்தில் அருள்பாலிப்பார்
அதுமட்டுமல்லாமல் பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற கோவில்களுக்கு முருக பக்தர்கள் செல்லும் முன் தேனி மாவட்டத்திலுள்ள முருக பக்தர்கள் இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பால் குடம் செலுத்திய பின்னரே பெரிய திருத் தலங்களுக்குச் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல சபரிமலை சீசன் நேரத்திலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த கோவிலை காணாமல் செல்வதில்லை.
திருமணத்தடை :-
இந்த வழிவிடும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்தும் எலுமிச்சை விளக்கு செய்தும், கூடுதல் சில சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலமும் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
அதுமட்டுமல்லாமல் இங்கு விநாயகர் சிலையும் உண்டு. இங்குள்ள விநாயகரை வழிபட்டு முருகனுக்கு தொட்டில் கட்டும் போது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது.
ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும் போது, வழிவிடும் முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சமயத்தில் திருமணத்தடை மற்றும் குழந்தை பிறக்காதவர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும்போது விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது .
செய்தியாளர்: சுதர்ஸன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gudalur, Kerala, Murugan temple, Thaipusam, Theni