முகப்பு /தேனி /

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்படும் திடீர் காட்டு தீ.. தேனி வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்படும் திடீர் காட்டு தீ.. தேனி வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?

X
மேற்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்படும் திடீர் காட்டு தீ

Theni News : மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்கு தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறை இணை இயக்குனர் ஆனந்த் கூறிய தகவல்களை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டு தீ பரவ தொடங்கியுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்கு தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தேனி மாவட்டம் மேகமலை கோட்டம் வனத்துறை இணை இயக்குனர் ஆனந்த் கூறிய தகவல்களை பார்க்கலாம்.

மேற்கு தொடர்ச்சி மலை :

தேனி மாவட்டம் பல்வேறு இயற்கை வளங்கள் நிரம்பிய செழிப்பான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் செழிப்பான நீர்வளம் இயற்கைவளம், கனிமவளம் போன்ற பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் புகழ் தமிழகம் எங்கும் ஒலிக்கிறது. 1600 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் மாநிலத்தில் தொடங்கி, தமிழகத்தின் தென் பகுதியான கன்னியாகுமரி வரை நீண்டு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையை தருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பல அரிய வகை மூலிகைகளும், பல காட்டு விலங்குகளுக்கான வாழ்விடமாகவும் விளங்குகிறது.

இதையும் படிங்க : கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 5,860 வகை தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில்,'எண்டமிக்' எனப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் 1,600 தாவரங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட அறிய வகையான மரங்களும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டுத்தீ :

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையில், கோடை காலத்தின்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மலைப்பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பரவுவது நீண்டகாலமாக நீடித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலத்தின்பொழுது பெரியகுளம், போடி, கம்பம் போன்ற வனப்பகுதிகளில் காட்டு தீ பரவுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு தீ மளமளவென பரவி வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதனைத்தொடர்ந்து தேவதானப்பட்டி, போடிநாயக்கனூர் பகுதியிலும் காட்டு தீ பரவ தொடங்கியது.

கம்பம் மேற்கு மலை பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பல பகுதிகளில் ஆங்காங்கே காட்டு தீ எரிந்து கொண்டே தான் இருக்கிறது. காட்டுத் தீயினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் மரங்கள் மற்றும் செடிகள் தீயில் கருகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காட்டுத் தீயை கட்டுப்படுத்த மாவட்ட வனத்துறை சார்பாக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வனத்துறை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? 

இங்குள்ள மலைக் கிராம மக்கள் கரிக்கட்டைக்காக வனப்பகுதிக்கு தீ வைப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து வனத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காட்டுத்தீ பரவாமல் தடுக்க தேனி மாவட்டத்தில் வனத்துறையினர் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை அலுவலரான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மேகமலை கோட்டம் இணை இயக்குனர் ஆனந்த் அவர்கள் கூறுகையில், “மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவியது. காட்டுத் தீயால் பெரிய அளவில் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

மலைப்பகுதி அதிக பாறைகளை கொண்டுள்ளதால் 6 அடி வரை உயரம் கொண்ட புற்களும் காய்ந்துபோன மரங்களும் காட்டுத்தீயால் எரிந்து நாசமாகின. அரிய வகை மரங்கள் பெரும்பாலும் தேனி மாவட்ட பகுதியில் ஏற்படும் காட்டுத் தீயினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை நடவடிக்கைகள் வனத்துறையினர் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலை அடிவாரப் பகுதிகளிலும், மலை சார்ந்த பகுதிகளுக்கு அருகே வாழும் மக்களுக்கும் காட்டுத்தீ பற்றிய போதிய விழிப்புணர்வு வனத்துறையினர் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வனப்பகுதி வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தும் மக்களுக்கு காட்டு தீ ஏற்படாதவாறு சாலை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும், சாலையின் இரு புறங்களிலும் காய்ந்த புற்கள் மற்றும் புதர்களை அகற்றுவதற்கான நடவடிக்கையும் வனத்துறை எடுத்துள்ளது. காட்டுத்தீ அதிகம் பரவக்கூடிய இடங்களில் தீத்தடுப்பு காவலர்கள் 24 மணி நேரமும் உரிய உபகரணங்களுடன் பணியில் உள்ளனர்.

தீ பரவாமல் தடுக்கப்படும் :

பணியில் உள்ள காவலர்கள் காட்டுத்தீ பரவினால் அதனை உடனடியாக, வனச்சரக அதிகாரியிடம் தெரிவித்து காட்டுத்தீ பெரிய அளவில் பரவாமல் தொடக்கத்திலேயே அணைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். குறிப்பாக வனத்துறையினரால் காட்டுத்தீ அதிகம் பரவக்கூடிய இடமாக கண்டறியப்பட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இந்த கோடுகள் மூலமாக எதிர்பாராத விதமாக காட்டுத்தீ பரவினாலும் விலை உயர்ந்த மரங்கள் காட்டுத்தீயில் சிக்காமலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் தீ பரவாமலும் தடுக்கப்படும்.

காட்டுத்தீ காரணமாக வனப்பகுதியில் வாழும் விலங்குகள் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து, காட்டுத்தீ அணைந்தவுடன் மீண்டும் அதே பகுதிக்கு வந்துவிடுகின்றன. காட்டுத் தீயை கட்டுப்படுத்த மாவட்ட வனத் துறை சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. காட்டுத்தீ ஏற்படும் இடங்களில் வாகனம் செல்லக்கூடிய பாதையாக இருப்பின் தீயணைப்புத்துறை வாகனத்தின் உதவியோடு காட்டுத்தீயை முயற்சி நடைபெறும். நடக்க முடியாத இடங்களிலும் காட்டு தீ பரவுவதை வனத்துறை அதிகாரிகள் வின்டு பிளோவர் (wind blower) கருவியைக் கொண்டு காட்டு தீயை அணைத்து வருகின்றனர்.

கண்டறிவது மிகவும் கடினம் :

மேலும் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்படும் இடங்களை கண்டறிவது மிகவும் கடினம். நம்மிடையே காட்டுத் தீ பரவும் இடங்களை சேட்டிலைட் இமேஜ் உதவியுடன் கண்டறிந்து விரைவில் அணைப்பதற்கான தொழில்நுட்பம் கையில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் காட்டுத்தீ பரவிய தகவல் தெரிந்தவுடன் வனத்துறை அதிகாரிகள் 40 நிமிடம் முதல் அதிகபட்சமாக உயரமான மலையாக இருந்தால் 3 மணி நேரத்திற்கு உள்ளாக அந்த பகுதிக்கு சென்று தீயணைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவர். தொடர்ந்து காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் வனத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

First published:

Tags: Local News, Theni