கோம்பைத்தொழு பகுதியில் வனத்துறை கெடுபிடியால் விவசாயிகள் தவிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு அருகே உள்ள பகுதிகளில் வனத்துறை கெடுபிடியால்
விவசாயிகள் பட்டா நிலத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
விவசாயிகள் பரிதவிப்பு :-
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக சின்னசுருளி அருவி செல்லும் மலையடிவாரத்தில் இலவம் பஞ்சு சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. சின்னசுருளி அருவிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அந்த பகுதி மேகமலை வனச்சரக அலுவலர்கள் கட்டுபாட்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சின்னசுருளி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்யவிடாமல் வனத்துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் சொந்த நிலத்திற்குள் விவசாயிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர விவசாய நிலங்களுக்குள் எந்தவிதமான கட்டுமான பணிகள், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம், இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்றும், நில அளவீடு செய்து உங்களுக்கு இடம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது . இதனால் இப்பகுதி விவசாயிகள் பல முறை நில அளவீடு செய்ய முயன்ற போதும் அவர்களை வனத்துறையினர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இதனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகள் அவர்களது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்பகுதி விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோம்பைத் தொழுவை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி ராஜாமணி கூறுகையில்,
எனக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலம் சின்னசுருளி அருவிக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த இடத்திற்கு 1972ம் ஆண்டு பட்டா பெற்று தற்போது வரையில் வரி செலுத்தி வருகிறேன். தற்போது எனது நிலத்தில் இலவம் பஞ்சு பயிரிட்டு உள்ளேன். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் எனக்கு தற்போது வனத்துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதிக்கின்றனர். எனது நிலத்திற்குள் செல்ல கூட எனது அனுமதி மறுத்து வருகின்றனர். வனத்துறையினரிடம் கேட்டால் இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்றும், அளவீடு செய்து உங்களுக்கு இடம் இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் என்றும் கூறினார். இதனையடுத்து நான் இதுவரை 6 முறை இடத்தை அளவீடு செய்ய விண்ணபித்தும், வனத்துறையினர் சார்பில் அளவீடு பணிகளுக்கு வரவில்லை. இதனால் பட்டா வாங்கிய எனது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறேன் என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.