கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் அமுக்கரா மாத்திரைகள் வழங்கும் முகாம் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி மற்றும் குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது.
கொரோனா பரவல்

அமுக்கரா மாத்திரை வழங்கல்
உலகையே அச்சுறுத்திக் கொண்டு வந்த கொரோனா வைரஸ் பரவல் மூன்று அலைகளைக் கடந்து தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவும் விகிதத்தை குறைக்க பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போதும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அமுக்கரா மாத்திரை வழங்கல்
அந்த வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகமும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் உணவு வகைகளையும், பாரம்பரிய மருந்துகளையும் பரிந்துரைத்துள்ளது. அதில் குறிப்பிடப்படும் சித்த மருந்துகளில், ’அமுக்கரா சூரண மாத்திரையும்’ அடங்கும். இதனை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு வழங்கும் முறை பயன்பாட்டில் உள்ளது.
அமுக்கரா மாத்திரைகள்
இந்தியாவின் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒருபகுதியாக சித்த மருத்துவத்தினை இந்திய அளவில் பிரபலப்படுத்தும் நோக்கோடும், கொரோனா தொற்று பரவும் வேளையில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பொருட்டும், பொது உடல்நலத்தை மேம்படுத்தும் பொருட்டும், முதியவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்கும் பொருட்டும் புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினால் வழங்கப்படுகிறது.

அமுக்கரா மாத்திரை வழங்கல்
இந்த அமுக்கரா சூரண மாத்திரைகளானது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
முகாம்
இந்த நிலையில் காமயகவுண்டன்பட்டி சித்த மருத்துவ மருத்துவர்கள் கம்பம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று முதியவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் அமுக்கரா சூரண மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காலை 9 மணி முதல் கருநாக்கமுத்தன்பட்டி மற்றும் குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும்
தலா 1,000 பேர் என 2,000 பேர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் அமுக்கரா மாத்திரைகள் வழங்கும் முகாம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலையில்
நடைபெற்றது. கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியிலும், குள்ளப்ப கவுண்டன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் முகாம் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்களது பெயர், வயது முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் விபரங்களை வழங்கி மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஒவ்வொரு நபருக்கும் 30 மாத்திரைகள் கொண்ட கலன்களில் வழங்கப்படும் என சித்த மருத்துவர் சிராஜ்தீன் தெரிவித்தார்
மருத்துவர் அறிவுரை-
இதுகுறித்து சித்த மருத்துவர் கூறுகையில், ’அமுக்கரா சூரண மாத்திரையானது 7 வகை மூலிகை பொருட்களாலான ஒரு கூட்டு மருந்தாகும். இம்மருந்து வயிற்றுப்புண், இரத்தசோகை, ஈரல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் மறதி போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம், உடல் வன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் காயகற்பமாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அமுக்கரா சூரண மாத்திரை சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களினால் ஏற்படும் உடல் வன்மைக் குறைவை சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அமுக்கரா சூரண மாத்திரையை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலில் தினசரி இரு வேளை எடுத்துக் கொள்ளலாம் எனவும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊற இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்களும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் எனவும், இந்த மாத்திரை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை பெறுவதால் தொடர்ந்து இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் எனவும், நீரிழிவு, இரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வோரும் இந்த சூரணத்தை எடுத்து கொள்ளலாம் என சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறுகிறார்.
மேலும் பொது மக்கள் அனைவரும் இந்த அமுக்கரா சூரண மாத்திரையை மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தி தங்கள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து கொரோனா மற்றும் இதர தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்’ எனவும் கூறியுள்ளார்.
கருநாக்கமுத்தன்பட்டி மற்றும் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற அமுக்கரா மாத்திரைகள் வழங்கும் முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள்
மொக்கப்பன், பொன்னுத்தாய், குணசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அமரேசன், தனபால், தினேஷ், அன்பு, கிராம சுகாதார செவிலியர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.