மருமகள் மற்றும் ஒரு வயது குழந்தையை தீ வைத்து எரித்த மாமனார் - குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - தேனியில் பகீர் சம்பவம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில்தெருவில் வசிக்கும் கூலித் தொழிலாளியான 25 வயதாகும் அருண் பாண்டியன் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 21 வயதாகும் சுகப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு யாகித் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்த சூழ்நிலையில் அருண் பாண்டியனின் தந்தையான 53 வயதாகும் பெரியகருப்பன் தனது மருமகளிடம் வரதட்சனை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த பெரியகருப்பன் மருமகள் சுகப்பிரியா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வாக்குவாதம் முற்றி தனது மருமகள் சுகப்பிரியா மற்றும் பேரக்குழந்தையான யாகித் மீது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்துவிடும் நோக்கத்தோடு தீயை பற்றவைத்துள்ளார்.
இதனால் நெருப்பின் சூட்டால் கதறிய சுகப்பிரியாவை அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து படுகாயமடைந்த இருவரையும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி செய்யப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை யாசித்து உயிர் இழந்தது. சுகப்பிரியா மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் அறிந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாமனாரான பெரிய கருப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.