ஹோம் /தேனி /

டிஜிட்டல் ரீசர்வே விவகாரம் - தமிழக அரசின் மீது அதிருப்தியில் விவசாய சங்கத்தினர்

டிஜிட்டல் ரீசர்வே விவகாரம் - தமிழக அரசின் மீது அதிருப்தியில் விவசாய சங்கத்தினர்

டிஜிட்டல் ரீசர்வே

டிஜிட்டல் ரீசர்வே

Theni District News : கேரள மாநில அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் சர்வேயால் தமிழக பகுதிகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  • Local18
  • 4 minute read
  • Last Updated :
  • Theni, India

கேரள மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் டிஜிட்டல் ரீ சர்வே முறையால் தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விவசாய சங்கத்தினர் தமிழக அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாக அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்வர் பலசிங்கம் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ரீ சர்வே :

கேரள மாநிலத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் கேரளா அரசால் டிஜிட்டல் ரீசர்வே செய்யப்பட்டு வருகிறது. டிஜிட்டல் ரீ சர்வே முறையில் கேரள அரசு நிலங்களை மறு அளவீடு செய்யும் முறையே இந்த டிஜிட்டல் ரீசர்வே. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கேரள மாநில அரசால் டிஜிட்டல் ரீசர்வ் முறை தொடங்கி அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் கேரள மாநில அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீசர்வே முறையால் தமிழகத்தின் பல்வேறு நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீசர்வேயால் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளாவின் 15 தாலுகாகளில் தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பெரிய அளவிற்கு தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் கூறி, சமீபத்தில் பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.

கேரள மாநில அரசு நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழக நிலங்கள் பறிபோகும் அபாயம் குறித்து பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கூலித்தொழிலாளி கொலையில் பகீர் தகவல்.. தாயும், மகனும் கொலை செய்து நாடகமாடியது அம்பலம் - தேனியில் அதிர்ச்சி

இதனைத்தொடர்ந்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை சந்தித்து கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் ரீசர்வேயால் தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் குறித்து தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் .

இந்த டிஜிட்டல் ரீசர்வே முறையால் தமிழகத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டும் பாதிப்படைவது மட்டுமல்லாமல் கேரள வாழ் தமிழர்களும் பலர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வே முறை குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில்தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தை உள்ளடக்கிய ஆனைக்கல்லுக்கும்பாப்பம்பாறைக்கும் இடைப்பட்ட பகுதி இடம் கேரள அரசுக்கு சொந்தமானது என்று போர்டு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், டிஜிட்டல் ரீசர்வே முறை தொடங்கி பல நாட்கள் ஆகியும் தமிழக அரசு இதன் மீது எந்த கவனமும் செலுத்தவில்லை என்று அதிருப்தியை தெரிவிக்கின்றனர் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர்.

தமிழக அரசின் மீது அதிருப்தி :

இதுகுறித்து பெரியார் வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளரான அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘தமிழக அரசின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக, தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எங்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த நவம்பர் 1ம் தேதியில் இருந்து டிஜிட்டல் ரீ சர்வே என்கிற மோசடியை கேரள மாநில அரசு அப்பட்டமாக தமிழக எல்லைக்குள் நடத்தி வருகிறது.இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் குரலெழுப்பி வருகிறது.

இதையும் படிங்க : மாற்றுத் திறனாளிகளுக்கு புத்துணர்வு.. கம்பம் நகரில் களைகட்டிய விளையாட்டு போட்டிகள்..

வேறு வழியின்றி கடந்த நவம்பர் 7ம் தேதி தொடுபுழா சர்வே அலுவலகத்தில் இருந்து, தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் வந்ததாக சொன்னார்கள். குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் தமிழகம் கேரளாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், எங்கோ இடுக்கி மாவட்டத்தில் ஒரு தாலுகாவாக அறியப்படும் தொடுபுழாவிலிருந்து தகவல் வந்தது ஏன் என்கிற இமாலைய கேள்வி எங்களுக்கு எழுகிறது.

இடுக்கி மாவட்டத்தில் டிஜிட்டல் ரீசர்வேக்காக 18 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்கிற தகவலையும் தமிழக அரசுக்கு முறைப்படி தெரிவித்தோம். அதில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பாறத்தோடு, சாந்தம்பாறை, சதுரங்க பாறை ஆகிய மூன்றும் பட்டியலில் இருக்கிறது என்பதையும் அறிவித்தோம்.

தேவாரம் கிராமத்தை ஒட்டி இருக்கும் சாக்கலூத்து மெட்டு டிஜிட்டல் ரீ சர்வே அளவீட்டிற்குள் வருகிறது என்பது தெரிந்தும், தமிழக எல்லையில் உள்ள வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது .

ஜமீன் ஒழிப்பிற்கு பிறகு, அவர்கள் கைவசம் இருந்த நிலங்கள் அத்தனையும் வனத்துறைக்கு ஒரு பகுதியும், வருவாய்த் துறைக்கு ஒரு பகுதியும் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு துறைகளுமே, ஜமீன்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறோம்” என்றனர்.

ஜமீன் பட்டா முறையில் அளவீடு தேவை :

மேலும், “வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகள் முறையாக பதிவேடுகளை பராமரிக்காததால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களை கேரளா Double Entry ( இரட்டை பதிவு ) மூலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது.

வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஜமீன் பட்டா அடிப்படையில் என்பதை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் .

இன்றைக்கும் ஒரு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், சுதந்திரத்திற்கு பிந்தைய யூடிஆர் எனப்படும் அ பதிவேட்டின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை தமிழக வருவாய் துறை செயலாளருக்கு அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தமிழக-கேரள எல்லை அளவீடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு. வருவாய்த்துறை அமைச்சர் அவர்களை நேரில் இரண்டு முறை சந்திக்கும் போதும், இதைத்தான் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.

திருத்தம் செய்யப்பட்ட அ பதிவேட்டின் அடிப்படையில் எல்லை அளவீடு நடக்குமானால், பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை தமிழகம் கேரளாவிடம் இழக்கும். இந்த கருத்து தவறு என்றால் தமிழக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் எங்களுடன் நேருக்கு நேர் விவாதிப்பதற்கு தயாராக வேண்டும்.

டிஜிட்டல் ரீ சர்வே என்கிற மோசடியை கேரளா தொடங்கி இன்றோடு 28 நாட்கள் நிறைவு பெறுகிறது. தமிழக கேரள எல்லையோரம் உள்ள நிலங்களை அளப்பதற்கான, இரண்டு மாநில அதிகாரிகளைக் கொண்ட கூட்டு கமிட்டி, இன்னும் அமைக்கவில்லை என்பது எங்களுடைய குற்றச்சாட்டாக உள்ளது

தன்னிச்சைக்கு தன்னுடைய மாநிலத்தை கேரளா சர்வே செய்வதற்கு அது ஒன்றும் தனித்தீவு அல்ல. தமிழகம் மற்றும் கர்நாடகவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரு மாநிலம்.

காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் கர்நாடகவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கேரள மாவட்டங்கள். மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் எல்லையை கேரளா டிஜிட்டல் ரீ சர்வே செய்யும்போது, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் எல்லையை அளக்க முடியாது. அதே நடைமுறையை ஏன் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களிலும், டிஜிட்டல் ரீ சர்வே குழு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி.

தமிழக வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் நில அளவைத்துறை அதிகாரிகள், கேரளா தன்னிச்சையாக நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக நடத்திய கூட்டுக் கூட்டங்கள் எத்தனை என்பது எங்களுடைய கேள்வி.

தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள 15 தாலுகாக்களான, கட்டக்கடை, நெய்யாற்றின்கரை,நெடுமங்காடு, புனலூர், கோணி, பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம், சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு, நிலம்பூர், வைத்ரி மானந்தவாடி சுல்தான் பத்தேரி ஆகியவற்றில் கேரளா நடத்தவிருக்கும் ரீ சர்வே பணிகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து, கேரள மாநில தலைமைச் செயலாளரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட 15 தாலுகாக்களில் எல்லையை அளவீடு செய்வதற்கு முன் இரண்டு மாநில கூட்டு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஜமீன் பட்டா அடிப்படையில் எல்லை அளவீடு இருக்குமானால் நாங்கள் அரசுக்கு உறுதுணையாக இருப்போம். திருத்தப்பட்ட யூ டி ஆர் அடிப்படையில் எல்லை அளவிடு இருக்குமானால், நீதிமன்றத்திற்கு செல்வோம். இதுவே எங்கள் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் நிலைப்பாடு" என்றார்.

First published:

Tags: Local News, Theni